செய்திகள்
ரூ.6.74 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.6.74 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Published On 2021-10-18 10:27 GMT   |   Update On 2021-10-18 10:27 GMT
ஓசூர் கால்நடை பண்ணையில் ரூ.6.74 கோடியில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நாட்டுக்கோழி வளர்ப்பை மக்களிடையே ஊக்குவிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும், நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகளில் நவீன செயல்பாடுகளை விவசாயிகளுக்கு எடுத்துச்சொல்லி அவர்களின் திறன் மேம்படும் வகையில் பயிற்சியளிக்கவும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் 6 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இவ்வளாகம் 5 ஆயிரத்து 100 வளரும் கோழிகள் மற்றும் 9 ஆயிரத்து 150 முட்டையிடும் கோழிகளை பராமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் நபார்டு திட்ட நிதியில் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இக்கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கம், மீன்வளர்ப்பு தொழில் நிறுவனத்துக்கு தேவையான இரண்டாம் நிலை தொழில்நுட்ப துணைத் தொழில் உதவியாளர்களை உருவாக்குவதாகும்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககத்தின் கீழ் திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் 2020-21-ம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை மற்றும் 2020-21-ம் ஆண்டிற்கான பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய தொகையான 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஜவஹர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர்பழனிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் ஞானசேகரன், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சுகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News