செய்திகள்
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் இருபுறமும் கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுவதை காணலாம்

குமரி மாவட்டத்தில் 29 ஆண்டுகளுக்கு பிறகு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை

Published On 2021-10-18 03:29 GMT   |   Update On 2021-10-18 03:29 GMT
பேச்சிப்பாறை பகுதியில் பலத்த மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளமாக மாறி மலையோர பகுதி வழியாக குமரி மாவட்டத்திற்குள் புகுந்து ஆறுகளில் வெள்ளமாக சென்றது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள கிராமங்கள் பலத்த மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது. இதற்கு பலத்த மழை மட்டும் காரணம் அல்ல. அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீரும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டதால் இந்த அளவுக்கு பெரும் வெள்ளம் பெருக்கெடுக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது, குமரி-நெல்லை எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள அப்பர் கோதையாற்றில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி அப்பர் கோதையாற்றில் மட்டும் 363 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

1992-ம் ஆண்டு 307 மில்லி மீட்டர் மழை பெய்தது. 29 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வரலாறு காணாத மழை, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துள்ளது. இதேபோல் பேச்சிப்பாறை பகுதியிலும் பலத்த மழை பெய்ததால், காட்டாற்று வெள்ளமாக மாறி மலையோர பகுதி வழியாக குமரி மாவட்டத்திற்குள் புகுந்து ஆறுகளில் வெள்ளமாக சென்றது.

மேலும் அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் புகுந்தது. இதுவே ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.



கனமழையால் மாவட்டத்தில் 8 மரங்கள், 15 மின்கம்பங்கள் மற்றும் 6 வீடுகள் சேதமடைந்தன. அதாவது அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் 3 வீடுகளும், கல்குளம் தாலுகா பகுதியில் 2 வீடுகளும், விளவங்கோடு தாலுகாவில் ஒரு வீடும் மழைக்கு இடிந்துள்ளது.நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை- 216.6, சிற்றார் 1- 204.4, பூதப்பாண்டி- 50.8, சிற்றார் 2- 194.6, களியல்- 47.2, கன்னிமார்- 80.2, தக்கலை- 27, குழித்துறை- 35.5, மயிலாடி- 75.2, பெருஞ்சாணி- 113, புத்தன் அணை- 110.4, சுருளோடு- 102.4, பாலமோர்- 152.2. குளச்சல்- 34.4, இரணியல்- 35, மாம்பழத்துறையாறு- 53, கோழிப்போர்விளை- 57, ஆரல்வாய்மொழி- 23, அடையாமடை- 81, குருந்தங்கோடு- 50.4, முள்ளங்கினாவிளை- 28.6, ஆனைக்கிடங்கு- 43.2, முக்கடல் அணை- 45.4 என பதிவாகி இருந்தது.

பலத்த மழையால் திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. அதனை மோட்டார் மூலம் வெளியேற்றும் நடவடிக்கையை கோவில் ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டனர். மேலும், புதுக்கடையில் ஒரு முருகன் கோவிலிலும் வெள்ளம் புகுந்தது. இதுபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களிலும் வெள்ளம் புகுந்தது.

பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுசீந்திரம் பகுதியில் உள்ள சில குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வடக்கு தாமரைகுளம் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.


Tags:    

Similar News