செய்திகள்
கோப்புபடம்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

Published On 2021-10-17 02:27 GMT   |   Update On 2021-10-17 02:27 GMT
வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
சென்னை:

வங்க கடல் மற்றும் அரபிக்கடலில் நிலைக்கொண்டு இருக்கும் 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மற்றும் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்கள் உள்பட சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.

அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் கூறி இருக்கிறது.



நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும், 20-ந் தேதி (புதன்கிழமை) தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘தர்மபுரி 7 செ.மீ., பொண்ணை அணைக்கட்டு, நாகர்கோவில், கன்னியாகுமரி, ஜம்புகுட்டப்பட்டி, சோழவரம் தலா 6 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், கொட்டாரம் தலா 5 செ.மீ., மைலாடி, திண்டிவனம் தலா 4 செ.மீ.' உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.

Tags:    

Similar News