செய்திகள்
பக்தர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்கள்

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு- திருக்குறுங்குடியில் தரைப்பாலம் மூழ்கியதால் பக்தர்கள் தவிப்பு

Published On 2021-10-16 08:39 GMT   |   Update On 2021-10-16 08:39 GMT
தென்காசி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் திருமலை நம்பி கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தவர்களும் வந்து தரிசனம் செய்வார்கள். கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இந்த கோவில் களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமானவர்கள் அங்கு சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.

இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பி கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றனர்.

இந்நிலையில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக நம்பியாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தரைப்பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தது.

இதனால் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வர முடியாமல் தவித்தனர். திருக்குறுங்குடி மலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் நம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் இன்று தண்ணீரில் மூழ்கியது.

இதனால் அங்கு சென்ற பக்தர்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதை அறிந்த நாங்குநேரி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய சுமார் 200 பேரை கயிறு கட்டி மீட்டனர்.

தொடர்ந்து அங்குள்ள பக்தர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

தென்காசி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இன்று பிற்பகல் குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரிக்கும் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி தடாகத்தில் விழுந்து வருகிறது.

இதே போல் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.



Tags:    

Similar News