செய்திகள்
கோப்புப்படம்

மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 138 இடங்களில் வெற்றி: 73 ஊராட்சி ஒன்றியங்களையும் கைப்பற்றியது

Published On 2021-10-14 01:08 GMT   |   Update On 2021-10-14 01:08 GMT
உள்ளாட்சி தேர்தல் இறுதி முடிவு வெளியான நிலையில், தி.மு.க. கூட்டணி மொத்தம் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர்கள் இடங்களில் 138 இடங்களை கைப்பற்றியது.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்றுமுன்தினம் எண்ணப்பட்டன. ஆனால் நேற்றுதான் முழு வெற்றி விவரமும் தெரியவந்தது.

இதில் பெரும்பான்மையான இடங்களுக்குமேல் பெற்று அனைத்து மாவட்ட ஊராட்சி கவுன்சிலையும் தி.மு.க. பெற்றது. இதேபோல் திருப்போரூர் தவிர அனைத்து ஊராட்சி ஒன்றியங்களையும் தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. திருப்போரூரில் மட்டும் இழுபறி நீடிக்கிறது

இதில் 140 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிக்கு நடந்த தேர்தலில் 138 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

இதேபோல் 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்த 1,381 இடங்களில் 1,368 பதவிகளுக்கு மட்டும் முடிவுகள் வந்துள்ளன.

இதில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களையும், அ.தி.மு.க. 214 இடங்களையும், பா.ம.க. 45 இடங்களையும், அ.ம.மு.க. 5 இடங்களையும், தே.மு.தி.க. ஒரு இடத்தையும் பெற்றுள்ளன.

சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம் 74 ஊராட்சி ஒன்றியங்களில் திருப்போரூரை தவிர்த்து 73 இடங்களையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
Tags:    

Similar News