செய்திகள்
போராட்டம்

கோவையில் 3 இடங்களில் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டம்

Published On 2021-09-27 04:38 GMT   |   Update On 2021-09-27 04:38 GMT
விவசாயிகள் போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பொள்ளாச்சி:

கோவை மாவட்டத்திலும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள், தி.மு.க. காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை கட்சிகள், ஆட்டோ தொழிற்சங்கத்தினர், பல்வேறு அமைப்பினர் ரெயில் மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் திருவள்ளுவர் திடல் அருகே இருந்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர், தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுவை சேர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் பொள்ளாச்சி ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ரெயில் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண் சட்டங்களை ரத்து செய், தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை திரும்பப் பெறு, பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பதை நிறுத்து என கோ‌ஷங்களை எழுப்பியும், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியினர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கோவை ரெயில் நிலையத்திலும் விவசாயிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தினர். இதேபோல் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலும் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

இந்த ரெயில் மறியலில் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொழிற்சங்கத்தினர், அமைப்பினர் கலந்துகொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இதேபோல் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் ஒரு சில ஆட்டோ சங்கத்தினர் தங்கள் ஆட்டோக்களை இயக்கவில்லை. இதனால் மாநகரில் காலை முதலே பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்கள் முன்பு ஆட்டோக்களை பார்க்க முடியவில்லை. அந்தந்த ஸ்டாண்டுகளிலேயே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விவசாயிகள் போராட்டத்தையொட்டி மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் ஒரு புறமும் நடந்து கொண்டிருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாவட்டத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகை, காய்கறி கடைகள், மார்க்கெட்டுகள் அனைத்து திறக்கப்பட்டிருந்தன. அங்கு வழக்கம் போல வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பஸ்களும் வழக்கம் போல் ஓடியது.

Tags:    

Similar News