செய்திகள்
தனிமைப்படுத்துதல்

கோவை மாவட்டத்துக்கு வரும் கேரள மாணவர்களை 10 நாள் தனிமைப்படுத்த உத்தரவு

Published On 2021-09-24 04:56 GMT   |   Update On 2021-09-24 04:56 GMT
கேரளா- தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கோவை:

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை பொறுத்து அவ்வப்போது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மளிகை, காய்கறி, பால் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மருந்தகங்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி 19-ந் தேதி கடைகள், தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்தநிலையில் அந்த கட்டுப்பாடுகள் இந்த வாரம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த 85 சதவீதத்துக்கும் மேலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் இந்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவுவதை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் கேரள மாநில மாணவர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்ல அனுமதியில்லை. அந்த மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படுகிறது. மேலும் விடுதிகளில் தங்கி பயிலும் கேரள மாணவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா இல்லை என்றால் மட்டுமே விடுதிக்குள் அனுமதிக்க வேண்டும். கேரள மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்கள் அனைவரும் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.

கோவிட் நோய் தொற்று அறிகுறி ஏதேனும் கண்டறியப்பட்டால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவித்து மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெறவும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

கேரளா- தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனைச்சாவடி வழியாக கோவை மாவட்டத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி 2 தவணை செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். அவை இல்லையெனில் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான வணிக வளாகங்கள், தியேட்டர்கள், டாஸ்மாக், மார்க்கெட்டுகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் இதர கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணையானது செலுத்தி இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News