செய்திகள்
கி.வீரமணி

நீட் தேர்வை எதிர்த்து 21-ந்தேதி கூட்டணி கட்சிகள் கூட்டம்: கி.வீரமணி

Published On 2021-09-17 04:09 GMT   |   Update On 2021-09-17 04:09 GMT
மாணவ செல்வங்கள் அவசரப்பட்டு தகாத முடிவுகளில் இறங்காதீர்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘நீட் தேர்வில் நாம் வெற்றி பெற முடியாது’ என்ற விரக்தியின் உச்சத்திற்கு சென்றதால் மன அழுத்தத்துக்கு ஆளாகி இந்த ஆண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வு காலத்தில் இதுவரை இந்த வாரத்தில் மட்டுமே 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என்பது நம் நெஞ்சங்களை கனலாக்குகிறது. ரத்த கண்ணீர் வடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சியில் நிச்சயம் இதற்கு விடியல் ஏற்படும். காரணம் இதனை எதிர்த்து ஒழிப்பதில் மு.க.ஸ்டாலின் காட்டும் உறுதியும், உத்வேகமும் உண்மையானது.

மருத்துவ படிப்புக்கு உள்ள தடைகளை நீக்க ஒரு தொடர் முயற்சிகளை தொய்வின்றி மேற்கொள்ள திராவிடர் கழகம் தன்னை ஒருங்கிணைப்பாளராக்கி கொண்டு அனைத்து ஒத்த கருத்துள்ள தமிழ்நாட்டு கட்சிகள், அமைப்புகளை அழைத்து பலகட்ட போராட்டங்கள் பற்றி யோசித்து முடிவெடுக்கும் கூட்டு முயற்சியில் ஈடுபட வருகிற 21-ந்தேதி அனைவருக்கும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம். சென்னை பெரியார் திடலில் அக்கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும்.

அதில் திட்டங்கள் அறிவிக்கப்படக்கூடும். தமிழக அரசின் முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டி நீட் கொடுவாள் மாணவர் தலைமேல் தொங்குவதை நீக்குவதற்கும், மாநில உரிமைகளை காக்கும் முயற்சிகளில் உறுதியாய் இருப்பதற்கும், சட்ட போராட்டங்களில் அனைவரும் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்துவது பற்றியும் யோசித்து முடிவுகளை எடுக்க வாய்ப்பு அமையும்.

எனவே மாணவ செல்வங்கள் அவசரப்பட்டு தகாத முடிவுகளில் இறங்காதீர்கள். தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து தன்னம்பிக்கையோடு நீட்டை வெல்லுவோம்’ என்று உறுதியோடு நம்பி கல்வி கற்க முனையுங்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News