செய்திகள்
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பொதுமக்களுக்கு உணவு பரிமாறிய காடசி.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் 3 ஆயிரம் பேர் பசியாற ஏற்பாடு

Published On 2021-09-17 03:53 GMT   |   Update On 2021-09-17 03:53 GMT
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் 3 ஆயிரம் பேர் பசியாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமயபுரம் :

அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்றது, சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும் பல்வேறு பகுதிகளில் இருந்து கார், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், பாத யாத்திரையாகவும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக நாளொன்றுக்கு மதியவேளையில் சுமார் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், பக்தர்கள் அதிகம் வரும் கோவில்களான திருச்செந்தூர் முருகன் கோவில், திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோவில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதான திட்டம் தொடங்கியது. திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பொதுமக்களுக்கு உணவு பரிமாறினார். சாதம், சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல், வடை, பாயசம், அப்பளம் போன்றவை வழங்கப்பட்டது. முதல் நாளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விழாவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரியப்பன், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து கோவில் இணை ஆணையர் கல்யாணி கூறுகையில், இதற்கு முன்பு கோவிலில் சுமார் 400 பேருக்கு மதிய உணவு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது நாள் முழுவதும் உணவு வழங்கும் திட்டத்தின்கீழ் நாள் ஒன்றுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணிவரை 3 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Tags:    

Similar News