செய்திகள்
கோயம்பேடு 100 அடி சாலையில் புதிய மேம்பாலத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறுவதை படத்தில் காணலாம்.

கோயம்பேடு மேம்பாலம் போக்குவரத்துக்கு தயார்- இந்த மாத இறுதியில் திறக்கப்படுகிறது

Published On 2021-09-16 08:12 GMT   |   Update On 2021-09-16 08:12 GMT
வடபழனி - கோயம்பேடு இடையே ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இது தவிர விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் சந்திப்பில் ஏற்படுகின்ற நெரிசலும் இனி குறைய வாய்ப்புள்ளது.
சென்னை:

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்குவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

குறிப்பாக பண்டிகை காலங்களில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பேருந்துகளை இயக்கும் போது பல மணி நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தவிர இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் சரக்கு வாகனங்களும் இந்த நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.

இதனால் பஸ் நிலையம் எதிரே 100 அடி சாலையில் ரூ.93.5 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. 1.3 கி.மீட்டர் தூரம் இரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பால பணி கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது.

வடபழனி - கோயம்பேடு இடையே ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இது தவிர விருகம்பாக்கம், காளியம்மன் கோவில் சந்திப்பில் ஏற்படுகின்ற நெரிசலும் இனி குறைய வாய்ப்புள்ளது.

திருமங்கலம், பாடி, அரும்பாக்கம் பகுதிகளில் இருந்து வடபழனி நோக்கி செல்லும் வாகனங்கள் கோயம்பேடு பஸ் நிலைய சிக்னலில் சிக்கிக் கொள்கின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த இடங்களில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வந்தது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. கடந்த ஆட்சியின் போது இந்த மேம்பாலத்தை திறக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் கொரோனா தொற்று பாதிப்பால் பணிகள் முடங்கின.

இந்தநிலையில் இறுதிகட்ட பணிகள் தற்போது முடிந்துள்ளன. இதையடுத்து போக்குவரத்துக்கு இந்த மேம்பாலம் தயாராகிவிட்டது. இந்த மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மேம்பாலத்தை திறக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இறுதிகட்ட பணிகளில் இரவு, பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பாலம் திறக்கப்பட்டால் 100 அடிசாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைய வாய்ப்புள்ளது.

பஸ் நிலையத்திற்கு வரக்கூடிய பஸ்களும், அங்கிருந்து வெளியே செல்லக்கூடிய பஸ்களும் நெரிசலில் சிக்காமல் எளிதாக செல்ல முடியும்.
Tags:    

Similar News