செய்திகள்
கொரோனா வைரஸ்

9-ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-09-06 08:54 GMT   |   Update On 2021-09-06 08:54 GMT
நாமக்கல், அரியலூர், தஞ்சை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவையிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சூலூர்:

கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு நேற்றுமுன்தினம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 9-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரிய வந்தது.

இந்த மாணவர்கள் 3 பேரும் சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் வீடுகளுக்கு சென்று தகவல் தெரிவித்தனர். 3 மாணவர்களும் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாணவர்களுடன் தொடர்பில் இருந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

மேலும் அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது. பள்ளி முழுவதும் கிருமி நாசினி கொண்டு தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே நாமக்கல், அரியலூர், தஞ்சை பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கோவையிலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News