செய்திகள்
கன்னியாகுமரியில் இன்று கடல் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிவதை படத்தில் காணலாம்

வங்க கடலில் நிலநடுக்கம் எதிரொலி - கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியது

Published On 2021-08-25 07:23 GMT   |   Update On 2021-08-25 07:23 GMT
வங்க கடலில் நிலநடுக்கம் எதிரொலி கன்னியாகுமரியில் இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியது பாறைகள் மணல் திட்டுக்கள் வெளியே தெரிந்தன

கன்னியாகுமரி:

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இது ஒரு உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். இங்கு வங்ககடல், இந்திய பெருங்கடல் அரபிக்கடல் ஆகிய மூன்று கடல்களும் சங்கமிக்கின்றன. இதனால் மற்ற கடற்கரை பகுதியை விட கன்னியாகுமரி கடற்கரை பகுதி கடல் தன்மையில் அடிக்கடி மாற்றங்கள் நிகழக் கூடியதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் நேற்று மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனால் சென்னையில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வங்கக் கடலோரம் அமைந்துள்ள கன்னியாகுமரிகடலிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இதனால் நேற்று மதியம் முதல் கன்னியாகுமரி கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்று 2-வது நாளாகவும் கன்னியாகுமரி கடல் நீர் மட்டம்தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.

இதனால் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் தண்ணீரின்றி வெளியே தெரிந்தன. கடலில் அலையும் இல்லாமல் குளம்போல் காட்சி அளித்தது.

இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்தனர். நீர் மட்டம் தாழ்வாக காணப்பட்டதால் கடலில் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிப்பதற்கு தயங்கினர். இதனால் இன்று காலை கன்னியாகுமரி கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் ரோந்து சுற்றி வந்த சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலில் இறங்கி ஆழமான பகுதிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகளை கரைக்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கடல் உள் வாங்கியதால் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக 10.30 மணிக்கு தொடங்கியது. கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்து படகில் பயணம் செய்தனர். 

Tags:    

Similar News