செய்திகள்
கேஎஸ் அழகிரி

பா.ஜனதா அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்கள்- கே.எஸ்.அழகிரி

Published On 2021-08-21 09:42 GMT   |   Update On 2021-08-21 09:42 GMT
கடந்த 7 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வசூலித்த மொத்த கலால் வரி ரூபாய் 22 லட்சத்து 34 ஆயிரம் கோடி என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைப்பதற்காக 2013-14-ம் ஆண்டில் மானியமாக ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரத்து 25 கோடி மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கி வந்தது.

தற்போது 2020-21-ல் மத்திய பா.ஜ.க. அரசின் மானியத் தொகை ரூபாய் 12 ஆயிரத்து 231 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மானியம் குறைக்கப்பட்டதாலும், கலால் வரி உயர்த்தப்பட்டதாலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படாததற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விற்கப்பட்ட ஆயில் பத்திரங்கள் தான் காரணம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த 7 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் வசூலித்த மொத்த கலால் வரி ரூபாய் 22 லட்சத்து 34 ஆயிரம் கோடி. ஆனால், 2014-15 முதல் ஆயில் பத்திரங்களுக்காக மத்திய பா.ஜ.க. அரசு செலவழித்த தொகை ரூபாய் 73 ஆயிரத்து 440 கோடியாகும். இது மொத்த கலால் வரியில் 3.2 சதவிகிதம் தான்.

சாதாரண, ஏழை, எளிய மக்களை கடுமையாக பாதிக்கிற வகையில் நடவடிக்கைகளை எடுக்கிற பா.ஜ.க. அரசு கார்ப்பரேட்டுகளின் நலனை பாதுகாப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. கார்ப்பரேட் வரியை 40 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைத்ததால் பா.ஜ.க. அரசின் வரி வருவாய் 2019-20-ல் ரூபாய் 5 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக இருந்தது, 2020-21-ல் ரூபாய் 4 லட்சத்து 57 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் கார்ப்பரேட் வரி ஒரு லட்சம் கோடி ரூபாயை மோடி அரசு குறைத்துள்ளது.

இதன்மூலம் மோடி அரசு யாருக்காக ஆட்சி நடத்துகிறது? கார்ப்பரேட்டுகளுக்காகவா? அல்லது சாதாரண, ஏழை, எளிய மக்களுக்காகவா? இந்த நடவடிக்கைகளை பார்க்கிற போது பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. மக்களை கடுமையாக பாதிக்கிற வரி விதிப்புகளை பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி திரும்பப் பெறவில்லையெனில், மக்களை திரட்டி கடுமையான போராட்டத்தை பா.ஜ.க. அரசு எதிர்கொள்ள வேண்டுமென எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News