செய்திகள்
திருமாவளவன்

கருணாநிதி பெயரில் “மொழியியல் பல்கலைக்கழகம்” தொடங்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

Published On 2021-08-07 04:59 GMT   |   Update On 2021-08-07 04:59 GMT
தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
சென்னை:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழியின் பாதுகாப்புக்காகவும், மேன்மைக்காகவும் அரும்பெரும் தொண்டாற்றிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பெயரில் தமிழ்நாட்டில் “மொழியியல் பல்கலைக்கழகம் ஒன்றைத் தொடங்க வேண்டும்” என்று அரசை கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் எத்தனையோ பல துறைகளுக்கெனத் தனித்தனியே பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு அவையாவும் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

ஆனால், மொழியியலுக்கென தனியே பல்கலைக்கழகம் ஏதும் இல்லை. உலகின் பல்வேறு மொழிகளைக் கற்பிக்கவும், இந்திய மொழிகளுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும், மொழி பெயர்ப்புகளை ஊக்குவிக்கவும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆராய்ச்சிக் கல்வி பயிலுவோர் இந்தியாவுக்கு வந்து மொழியியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் ஏதுவான வகையில் தமிழ்நாட்டில் பொருத்தமான ஒரு இடத்தில் கலைஞரின் பெயரில் அந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.

ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் அமைந்திருக்கும் மாஸ்கோ அரசு மொழியியல் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு அந்தப் பல்கலைக்கழகத்தை உருவாக்கலாம்.

கலைஞரின் 3-வது ஆண்டு நினைவு நாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முன் வைக்கப்படும் இந்த கோரிக்கையை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News