செய்திகள்
ஷேர் ஆட்டோக்கள்

சென்னை புறநகர் பகுதிகளில் ஷேர் ஆட்டோ கட்டணம் 60 சதவீதம் உயர்வு

Published On 2021-08-06 05:18 GMT   |   Update On 2021-08-06 05:18 GMT
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களில் தினமும் இருவேளை பயணம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.
சென்னை:

பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் சென்னையில் ஏற்கனவே கார் வாடகை மற்றும் ஆட்டோ கட்டணங்கள் உயர்ந்துள்ளன.

சென்னையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு வழித்தடங்களில் ஷேர் ஆட்டோக்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது.

தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என அனைத்து பகுதிகளிலுமே ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பஸ்களில் காத்திருந்து சென்றால் நீண்ட நேரம் ஆகிவிடும் என்பதாலும், ஆட்டோக்களை விட கட்டணம் குறைவு என்பதாலும் மக்கள் அதிகளவில் ஷேர் ஆட்டோகளையே பயன் படுத்துகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் ஷேர் ஆட்டோக்களில் தினமும் இருவேளை பயணம் செய்வதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

இந்த நிலையில் புறநகர் பகுதியில் ஷேர் ஆட்டோ கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. 60 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு பஸ், ரெயில்களில் செல்பவர்கள் குறைந்தது 5 கி.மீ. தூரம் அளவுக்காவது ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்தே தங்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பஸ் வசதி அதிகம் இல்லாத பகுதிகளிலேயே ஷேர் ஆட்டோக்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இதனால் பொது மக்கள் வேலைக்கு செல்வதற்கு, வீடு திரும்புவதற்கு ஷேர் ஆட்டோக்களையே முழுமையாக நம்பி உள்ளனர்.

இந்த நிலையில் அதன் கட்டண உயர்வு பொதுமக்களுக்கு தினசரி கூடுதல் செலவாகவே மாறி உள்ளது.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இருந்து கீழ்க்கட்டளைக்கு செல்வதற்கு இதற்கு முன்பு ரூ.25-ல் இருந்து 40 வரையில் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் ஷேர் ஆட்டோ கட்டணம் நபர் ஒருவருக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. பெட்ரோல்- டீசல் விலை உயர்வே இதற்கு முக்கிய காரணம் என்று ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர்.

ஷேர் ஆட்டோ கட்டணம் பொதுமக்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் ஷேர் ஆட்டோ டிரைவர்கள் தற்போது தங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

ஸ்மால் பஸ்கள் அதிக அளவில் விடப்பட்டதும், சீரான பஸ் போக்குவரத்து வசதிகளும் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன என்று கூறும் டிரைவர்கள் டீசல் விலை ஏற்றத்தாலும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஷேர் ஆட்டோக்கள் ஓடுவது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News