செய்திகள்
கோவை ரெயில்நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட காட்சி.

ரெயில்கள் மூலம் கோவை வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-08-04 04:30 GMT   |   Update On 2021-08-04 04:30 GMT
மே மாதத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு ரெயில்களில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோவை:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது. இதில் கோவை மாவட்டத்தில் மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்கள் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.

இதன் காரணமாக கோவை நகர்ப்புறத்திலும், புறநகர் பகுதிகளிலும் செயல்பட்டு வந்த தொழிற்கூடங்கள், நிறுவனங்கள், பஞ்சாலைகளில் வேலை பார்த்து வந்த பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.

பின்னர் மே மாதத்தில் கொரோனா தொற்று குறைந்ததால் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு ரெயில்களில் வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கோவையில் கடந்த 3 நாள்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வெளி மாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு சளி மாதிரிப் பரிசோதனை மேற்கொள்ளும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது:-

ரெயில் நிலையத்தில் வழக்கமாக உடல் வெப்பநிலை கண்டறியும் பரிசோதனை சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலமாகவும், ரெயில்வே நிர்வாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேனர் கருவி மூலமாகவும் பரிசோதிக்கப்பட்டு வந்தது.

தற்போது மாநகரில் பரவல் கணிசமாக உயர்ந்து வருவதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலமாக கோவையில் நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும், தினமும் ரெயில்களில் கோவை வரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ளும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 2,500 வெளிமாநிலத்தவர்களுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று புறநகர் பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வழக்கம் போல தடுப்பூசி செலுத்தப்படும் மையங்களில் 8 மணிக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டு 10 மணிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன்படி காரமடை , மதுக்கரை, கிணத்துக்கடவு, ஆனைமலை, பொள்ளாச்சி, பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், சூலூர்,  சர்க்கார் சாமகுளம், தொண்டாமுத்தூர் வட்டங்களில் 57 மையங்கள் கண்டறியப்பட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தலா 100 பேருக்கும் கோவேக்சின் 2-வது தவணை மட்டும் செலுத்தப்பட்டது. இதில் பொள்ளாச்சி நகராட்சியில் 2 மையங்களிலும், மேட்டுப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தலா 200 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை புறநகர் பகுதியில் 57 மையங்களில் 6000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News