செய்திகள்
மின்னொளியில் ஜொலிக்கும் விவேகானந்தர் நினைவுமண்டபம்-இருளில் மூழ்கியுள்ள திருவள்ளுவர் சிலை

கன்னியாகுமரியில் இரவில் இருளில் மூழ்கி கிடக்கும் திருவள்ளுவர் சிலை

Published On 2021-07-30 05:55 GMT   |   Update On 2021-07-30 05:55 GMT
கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணி வரை கடற்கரையில் அமர்ந்து கடல் காற்று வாங்கியபடி பொழுதைக் கழித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது.

இதில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை விவேகானந்தா கேந்திர நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதேசமயம் திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நிர்வகித்து வருகிறது.

இவற்றை கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்க்க மிகவும் ஆர்வப்படுவார்கள். தற்போது சுற்றுலா தலங்களில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

இருப்பினும் இரவு நேரங்களிலும் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுமண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கடற்கரையில் இருந்தபடியே சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்கு வசதியாக மின்விளக்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடித்தாலும், தற்போது கன்னியாகுமரிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக உள்ளனர். சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்படுகிறது.

கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணி வரை கடற்கரையில் அமர்ந்து கடல் காற்று வாங்கியபடி பொழுதைக் கழித்து வருகிறார்கள். இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் இரவு நேரங்களிலும் சுற்றுலா பயணிகள் பார்ப்பதற்கு வசதியாக மின்னொளியில் ஜொலிக்கிறது.

அதே நேரத்தில் அதன் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை மின்விளக்குகள் இன்றி இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மட்டுமே சுற்றுலா பயணிகள் பார்க்க முடிகிறது. அதன் அருகில் உள்ள பாறையில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை இரவு நேரத்தில் மின்னொளியில் பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

எனவே இரவு நேரங்களி லும் விவேகானந்தர் மண்ட பத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது போல், அதன் அருகில் உள்ள பாறையில் எழுப்பப்பட்டுள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் இரவு நேரங்களில் மின்னொளியில் ஜொலிப்பதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதற்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News