செய்திகள்
கோப்புபடம்

விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2021-07-29 08:35 GMT   |   Update On 2021-07-29 08:35 GMT
மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு தகுதிச்சான்று வழங்கக் கூடாது என மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை:

மதுரையை சேர்ந்த ஜாகீர் உசேன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரையில் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்கள் மோட்டார் வாகன விதிகளை பின்பற்றி செல்வதில்லை.

குறிப்பாக அதிக பயணிகளை ஏற்றி செல்வது, மீட்டர் பொருத்தாதது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்றவற்றை கூறலாம். இதனால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மீட்டர் பொருத்தாத ஆட்டோக்களுக்கு தகுதிச்சான்று வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

ஆட்டோக்கள், கார்களில் உள்ள கட்டண மீட்டர் முறைகேடாக மாற்றப்படுவது குற்றம் ஆகும்.

இதை அந்தந்த வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்கும் போது மீட்டர் சரியான முறையில் உள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மனுதாரரின் கோரிக்கை குறித்து மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதுரைக்கு உட்பட்ட பகுதியில் ஆட்டோ, கார்களில் கட்டண மீட்டர் முறையாக பொருத்தப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்யாமல் தகுதிச் சான்றிதழ் வழங்க கூடாது.

விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதையும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதையும் போக்குவரத்து அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஷேர் ஆட்டோக்களை மினி பஸ்களாகவும், மினி பஸ்களை பஸ்களாகவும் இயக்குவதை தடுக்க வேண்டும். அதிக ஆட்களை ஏற்றினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை போக்குவரத்து துறை இணை கமி‌ஷனர் கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News