செய்திகள்
மெட்ரோ ரெயில்

சோழிங்கநல்லூர்-சிறுசேரி சிப்காட் இடையே உயர்மட்ட மெட்ரோ ரெயில்

Published On 2021-07-22 08:46 GMT   |   Update On 2021-07-22 08:46 GMT
சோழிங்கநல்லூர்-சிறுசேரி சிப்காட் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாதை அமைக்க தனியாக டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் 2-வது திட்டப்பணி 3 வழித்தடங்களில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது.

மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.81 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 3-வது பாதையில் 19 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்டத்தில் அமைக்கப்படுகிறது.

இதில் சோழிங்கநல்லூர்-சிறுசேரி சிப்காட் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட பாதை அமைக்க தனியாக டெண்டர் விடப்பட்டுள்ளது.

இந்த பாதையில் 9 ரெயில் நிலையங்கள் அமைகின்றன. ஆன்லைன் வழியாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணியை மேற்கொள்ள 3 நிறுவனங்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

எல்.அன்.டி., ஐ.டி.டி., ஜே.எம்.சி. நிறுவனங்கள் இத்திட்டத்திற்கான டெண்டரை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றன. இத்திட்டம் 3 வருடத்தில் முடிக்கப்பட வேண்டும். பழைய மகாபலிபுரம் ஐ.டி. நிறுவனங்களை கவரும் வகையில் இந்த வழித்தடம் அமைகிறது.

இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

சோழிங்கநல்லூரில் 2-வது மற்றும் 3-வது அளவில் உயர்மட்ட வழித்தடத்தில் ஜங்சன் அமைக்கப்பட உள்ளது. இதில் சோழிங்கநல்லூர் ஏரி, பொன்னியம்மன் கோவில், சத்தியபாமா பல்லைக்கழகம், செம்மஞ்சேரி, காந்திநகர், நாவலூர், சிறுசேரி, சிப்காட்-1 மற்றும் சிப்காட்-2 ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

முன்னதாக மெட்ரோ ரெயில் பராமரிப்பு பணிமனை சிப்காட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கான திட்ட செலவு அதிகமானதால் அவை கைவிடப்பட்டது.

3 நிறுவனங்கள் இந்த டெண்டரை எடுப்பதற்கு போட்டி போடுகின்றன.

மாதவரம், பெரம்பூர், கெல்லிஸ், மயிலாப்பூர், அடையாறு வழியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் வடசென்னை பகுதி பழைய மகாபலிபுரம் ஐ.டி.பகுதியோடு இணைக்கப்படுகிறது. இதற்கான டெண்டர் இறுதி செய்ய 2 மாதம் ஆகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Tags:    

Similar News