செய்திகள்
கடல்போல் காட்சியளிக்கும் வைகை அணையை படத்தில் காணலாம்.

முழு கொள்ளளவை எட்டி வரும் வைகை அணை நீர் மட்டம்

Published On 2021-07-22 04:26 GMT   |   Update On 2021-07-22 04:26 GMT
தொடர் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக வைகை அணை நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டி வருவதால் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசன தேவையை பெற்று வருகின்றனர். 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர் மட்டம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக உயர்ந்து வந்தது.

இதனால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட வரத்து அதிகமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 68.44 அடியாக உள்ளது. வரத்து 1011 கன அடியாகவும், திறப்பு 769 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5430 மில்லியன் கன அடியாக உள்ளது.

இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் கரையோரம் உள்ள மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் உள்ள அபாய சங்கு 2 முறை ஒலிக்கப்பட்டது. 69 அடியாக உயர்ந்தவுடன் உபரியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் என்பதால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதே போல் 152 அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 130.25 அடியாக உள்ளது. வரத்து 1315 கன அடி. திறப்பு 900 கன அடி. இருப்பு 4756 மில்லியன் கன அடியாக உள்ளது.
Tags:    

Similar News