செய்திகள்
கரகதஹள்ளியில் அரசு குளிர்பதன கிடங்கு கனமழைக்கு இடிந்து விழுந்து சேதமானது

தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை- குளிர்பதன கிடங்கு சுவர் இடிந்து விழுந்தது

Published On 2021-07-02 08:36 GMT   |   Update On 2021-07-02 08:36 GMT
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கரகதஹள்ளி கிராமத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணி நடந்து வருகிறது.
தருமபுரி:

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பரவலாக பெய்த மழை பெய்தது.

தருமபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம், ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக பாலக்கோட்டில், 21.4 மி.மீ., என மாவட்டத்தில் மொத்தம், 65.4 மி.மீ., மழை பதிவானது. நேற்று மாலை, தருமபுரி, பாலக்கோடு, கடத்தூர் உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடி கனமழை பெய்தது.

அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்ததால் மக்கள் அவதியடைந்தனர். நேற்று மாலை அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. வறட்சியால் மரவள்ளிக்கிழங்கு, சோளம் உள்ளிட்ட பயிர்கள் வாடிய நிலையில், தொடர்ந்து, 2 நாட்களாக பெய்த கன மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கரகதஹள்ளி கிராமத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் பதப்படுத்தி வைக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று கரகதஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் குளிர்பதன கிடங்குக்கு கட்டப்பட்டிருந்த, 15 அடி உயர காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரியில் நேற்று மாலை பயங்கர இடி - மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட், டவுன் பஸ் ஸ்டாண்ட், பெங்களூரு சாலையில் கழிவுநீர் கலந்த மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News