செய்திகள்
கேஎஸ் அழகிரி

மத்திய அரசுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் திரள வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2021-06-26 06:37 GMT   |   Update On 2021-06-26 06:37 GMT
வேலைவாய்ப்பை பெருக்கவோ, பொருளாதார பேரழிவைத் தடுக்கவோ பிரதமர் மோடி முற்றிலும் தவறிவிட்டதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் தொற்று கண்டறியப்பட்டது முதற்கொண்டு, முதல் அலையின் போது அதை எதிர்கொள்வதற்கு தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த மத்திய பா.ஜ.க. அரசு தவறிவிட்டது.

அதனால், ஆக்சிஜன், மருத்துவ படுக்கைகள், உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஏறத்தாழ 4 லட்சம் மக்கள் தங்கள் உயிரைப் பறிகொடுத்துள்ளனர். உற்றார் உறவினர், நண்பர்கள் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கும் செய்தி கேட்டு ஒவ்வொரு வீடுகளிலும் அழுகுரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் காதுகளில் விழாமல் இருப்பது விந்தையாக இருக்கிறது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், ஜனவரி 16, 2021-ல் தொடங்கி இதுவரை ஒரு நாளைக்கு சராசரி 50 லட்சம் என்றளவில் ஜூன் 23-ந்தேதி வரை 29 கோடி மக்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 18 சதவிகிதம். இதில் இரண்டு டோஸ் போட்டவர்கள் 5 கோடி பேர். இது மக்கள் தொகையில் வெறும் 3.8 சதவிகிதம் மட்டுமே.

இதேபோக்கு நீடித்தால் தடுப்பூசி இலக்கை 2024-ல் தான் எட்ட முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால், இந்திய மக்கள் அச்சம், பீதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மத்திய பா.ஜ.க. அரசு முற்றிலும் தவறிவிட்டது.

அதேநேரத்தில், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. 2021-ம் ஆண்டில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர். 7 கோடியே 50 லட்சம் பேர் மீண்டும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இந்தியாவின் வலுவான 10 கோடி நடுத்தர வர்க்கத்தினர் தாங்கள் முந்தைய 5 ஆண்டுகளில் அடைந்த பலனை இழந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, வேலைவாய்ப்பை பெருக்கவோ, பொருளாதார பேரழிவைத் தடுக்கவோ முற்றிலும் தவறிவிட்டார்.

கொரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கடுமையான தாக்குதலை பா.ஜ.க. அரசு நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டி விட்டது.

கடந்த ஏழாண்டுகால பா.ஜ.க. ஆட்சி, பெட்ரோல், டீசல் மீது கலால் வரியாக ரூபாய் 25 லட்சம் கோடி வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் மீது இத்தகைய தாக்குதலை மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த அரசும் தொடுக்காது.

எனவே, அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பா.ஜ.க. அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News