செய்திகள்
தடுப்பூசி

சென்னை கோட்டத்தில் 91 சதவீத ரெயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி

Published On 2021-06-24 04:11 GMT   |   Update On 2021-06-24 17:38 GMT
தடுப்பூசி ரெயில்வே ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் செலுத்தப்படுகிறது.

சென்னை:

தெற்கு ரெயில்வேயில் சென்னை கோட்டத்தில் உள்ள என்.ஜி.ஓ. ரெயில்வே மருத்துவமனையில் தடுப்பூசி போடும் முகாம் கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

ரெயில்வே முன்களப் பணியாளர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி தினமும் செலுத்தப்படுகிறது. இந்த மருத்துவமனையில் 10 ஆயிரமாவது தடுப்பூசி சென்னை கோட்ட மெக்கானிக்கல் துறை முதுநிலை டெக்னீசியன் மகேந்திரனுக்கு செலுத்தப்பட்டது.

கோட்ட மேலாளர் மகேஷ் தலைமை தாங்கி அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவக் குழுவினரை பாராட்டினார்.

இது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

சிறப்பு முகாமில் சுகாதார பணியாளர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் பிற முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது.

இதன் பின்பு மற்ற துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி ரெயில்வே ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் செலுத்தப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமைகள் தவிர அனைத்து நாட்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடக்கிறது. சென்னை கோட்டத்தில் 21 ஆயிரத்து 435 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதிக ஊழியர்கள் கொண்ட இந்த கோட்டத்தில் தற்போது வரை 91 சதவீதம் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 19,511 ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News