செய்திகள்
ராமதாஸ்

மேகதாது அணை விவகாரம்: சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-06-19 07:16 GMT   |   Update On 2021-06-19 07:16 GMT
கர்நாடக அரசின் விதிமீறலை உறுதி செய்வதற்காக மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தேர்ந்தெடுத்துள்ள பகுதியை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டு எல்லையையொட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு அனுமதியின்றி மேற்கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழுவை அனுப்ப வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு அளித்தத் தீர்ப்பை அத்தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு ரத்து செய்துள்ளது. இது தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டம் கர்நாடகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் கர்நாடக முதல்-அமைச்சர் எடியூரப்பா பெங்களூரில் நேற்று அறிவித்திருக்கிறார். கர்நாடக முதலமைச்சரின் அறிவிப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதி அளிக்காத நிலையில், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கர்நாடகம் செய்திருந்தால் அது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். மேகதாது அணை தொடர்பான வழக்கில் அது தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை பெறுவதற்கு உதவும். கர்நாடக அரசின் விதிமீறலை உறுதி செய்வதற்காக மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு தேர்ந்தெடுத்துள்ள பகுதியை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும்.

எனவே, மேகதாது அணை பகுதியை ஆய்வு செய்வதற்காக வல்லுனர் குழு அமைத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News