செய்திகள்
பேஸ்புக்

பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பண மோசடியில் ஈடுபடும் கும்பல்

Published On 2021-06-18 09:11 GMT   |   Update On 2021-06-18 09:11 GMT
செல்போன் மற்றும் கம்யூட்டர் மூலம் வங்கி கணக்குகளை கையாளுபவர்கள் ரகசிய குறியீடு எண்களை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும்.

நாகர்கோவில்:

நவீன தகவல் தொடர்பு சாதனங்களான செல்போன், இணையம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஏராளமான ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வருகிறது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இருந்து புரோபைல் படங்களை எடுத்து அவர்களின் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி, அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் நெருக்கடியான நிலையில் இருப்பதாகவும், அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் இன்பாக்சில் குறுந்தகவல் அனுப்புகிறார்கள்.

இதனை நம்பி ஏதோ அவசரம் என நினைத்து பேஸ்புக் நண்பர்கள் சிலர் அந்த பேஸ்புக் தகவலில் உள்ள கணக்கிற்கு பணம் அனுப்புகிறார்கள்.

பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கிய கும்பல் அந்த பணத்தை அப்படியே மோசடி செய்து விடுகின்றனர். குறிப்பிட்ட அளவுக்கு பணம் சேர்ந்ததும் அந்த சமூக வலைதள கணக்கை முடக்கிவிடுவர்.

பணம் கொடுத்தவர்கள் பின்னர் இது குறித்து நண்பரிடம் விசாரித்தால் அவருக்கு எதுவும் தெரிந்து இருக்காது. அதன்பின்னர் தான் நண்பரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி பண மோசடி நடந்து இருப்பது தெரியவரும்.

அதன்பின்னர் அந்த கும்பலை கண்டுபிடிப்பதும், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்பதும் எளிதில் முடியாத செயல் என்பதால் பணத்தை இழந்த பலரும் இதுபற்றி போலீசில் புகார் செய்வதில்லை.

சமீபத்தில் நாகர்கோவிலை சேர்ந்த ஓய்வுபெற்ற பெண் பேராசிரியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி அவரது பெயரில் பணமோசடி செய்துள்ளனர். அந்த கணக்கில் சிலர் பணம் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தியவர்கள் இதுபற்றி கல்லூரி பேராசிரியையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

அப்போதுதான் தனது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி இருப்பது பேராசிரியைக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது பேஸ்புக் கணக்கில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பதாகவும் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரது பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி ஒரு கும்பல் பண வசூலில் ஈடுபட்டுள்ளது.

குமரி மாவட்டம் முழுவதிலும் சமீப காலமாக இதுபோன்ற பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த மோசடி கும்பல் முதியோர்களையும், தனியாக வசிப்பவர்களையும் குறிவைத்தே ஆன்லைன் பண மோசடியில் ஈடுபடுகிறது.

குறிப்பாக முதியோரை செல்போனில் அழைத்து கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, உங்கள் ஏ.டி.எம்.எண் காலாவதியாகிறது. மீண்டும் புதுப்பிக்க உங்களின் 16 இலக்க ஏ.டி.எம். எண், மற்றும் ஏ.டி.எம்.ரகசிய குறியீட்டு எண்களை கேட்டுப்பெற்றுக்கொண்டு வங்கி கணக்கில் இருந்து மின்னல் வேகத்தில் பணத்தை அபேஸ் செய்து விடுகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதியை சேர்ந்தவர் பாலாசிங். ஓய்வு பெற்ற விஞ்ஞானியான இவர், தன் மனைவி லலிதாவுடன் வசித்து வருகிறார்.

இவரது செல்போனுக்கு திடீரென ஒருநாள் அழைப்பு வந்தது. செல்போனில் பேசிய மர்ம ஆசாமி “வங்கியில் இருந்து பேசுவதாகவும் ஏ.டி.எம்.அட்டையின் தேதி காலாவதியாகிவிட்டது.

எனவே அதை புதுப்பிக்க ஏ.டி.எம்.அட்டையின் 16 இலக்க எண்களையும் அதன் குறியீட்டு எண்களையும் கூறுமாறும் கேட்டுள்ளார். மேலும் தற்போது செல்போனில் ஓ.டி.பி. எண் வரும். அதில் உள்ள எண்களையும் தெளிவாக சொல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதை நம்பி பாலாசிங் அனைத்தையும் கூறியுள்ளார். சற்று நேரத்தில அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.12 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலாசிங் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் அதே பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியரின் வங்கி கணக்கில் இருந்தும் ரூ. 3.5 லட்சம் திருடப்பட்டது. குழித்துறையில் வசித்து வரும் முதியவர் ஒருவரும் ரூ.19 ஆயிரத்தை இந்த மோசடி கும்பலிடம் பறிகொடுத்துள்ளார்.

இது தொடர்பாக இணையதள நிபுணர்கள் கூறும்போது, முதியோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக தனிமையில் வசிக்கும் முதியோரை குறிவைத்தே இதுபோன்ற மோசடிகள் அதிக அளவில நடைபெறுகிறது. பொதுவாக எந்த அரசு நிறுவனமும் ஏ.டி.எம்.அட்டையின் ரகசிய குறியீட்டு எண்களை கேட்பதில்லை.

வங்கிகளில் இருந்தும் உறுதியாக கேட்க மாட்டார்கள். யாராவது இதுபோல் தொடர்பு கொண்டு கேட்டால் அந்த எண் குறித்து போலீசில் தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது அவசர உதவி எண் 100-ல் தொடர்பு கொண்டும் கூறலாம். மோசடி செய்யும் பணத்தை வேறு வங்கி கணக்கில் மாற்றினால் அதை மீட்க முடியும். ஆனால் பெரும்பாலும் ஆன்லைனில் பொருட்கள் வாங்கிவிடுவதால் மீட்பது கடினம். எனவே, தொடக்கத்திலேயே போலீசாரிடம் புகார் அளித்தால் மோசடி கும்பலை பிடித்துவிடுவார்கள் என்றனர்.

செல்போன் மற்றும் கம்யூட்டர் மூலம் வங்கி கணக்குகளை கையாளுபவர்கள் ரகசிய குறியீடு எண்களை மிகவும் கவனமாக வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைன் பரிவர்த்தனை முடிந்தால், அப்பகுதியை லாக் அவுட் செய்தபின்னரே வெளியே வரவேண்டும். தவறும் பட்சத்தில் நமது கணக்கில் இருந்து பணம் எடுக்க வாய்ப்பு ஏற்படும். எனவே இணையவழியில் பணபரிவர்த்தனை செய்வோர் உஷாராக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News