செய்திகள்
கொலை செய்யப்பட்ட சித்ரா செல்வி.

கள்ளக்காதலை கைவிட மறுத்த பெண் அடித்துக்கொலை

Published On 2021-06-15 07:23 GMT   |   Update On 2021-06-15 07:23 GMT
சிவகாசி பாரப்பட்டியை சேர்ந்த ரமேஷ் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பாரப்பட்டியில் விட்டு விட்டு திருப்பூர் வந்து கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.
திருப்பூர்:

மதுரை மாவட்டம் டி.ராமநாதபுரம் திருமாணிக்கம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவர் திருப்பூரில் கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்து வந்ததால் குடும்பத்தினருடன் திருப்பூர் கே.வி.ஆர். நகரில் வசித்து வருகிறார்.

பெருமாளின் மகள் சித்ரா செல்வி (வயது 31). இவரது கணவர் கடந்த 11 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சித்ராசெல்வி தனது 2 குழந்தைகளுடன் ராக்கியாபாளையம் ஜெய் நகரில் தனியாக  வசித்து வந்தார். குழந்தைகளை காப்பாற்ற கட்டிட வேலை, பனியன் நிறுவனம் உள்ளிட்ட வேலைகளுக்கு சென்று வந்தார்.

கட்டிட வேலைக்கு செல்லும் போது ரமேஷ் (47) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். அப்போது ரமேஷ், சித்ராசெல்வியிடம் தனக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். தற்போது நான் அவர்களை பிரிந்து வாழ்ந்து வருகிறேன் என கூறியுள்ளார். இதையடுத்து 2பேரும்  ஒரே வீட்டில் கணவன்-மனைவியாக வசித்து வந்துள்ளனர்.

நேற்று காலை ரமேஷ் வேலைக்கு சென்று விட்ட நிலையில், சித்ராசெல்வி நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. பக்கத்து வீட்டினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது சித்ரா செல்வி பிணமாக கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இதுகுறித்து உடனடியாக நல்லூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சித்ரா செல்வியின் முகம், மூக்கில் காயங்கள் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

இதைத்தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சித்ரா செல்வி எப்படி இறந்தார்? யாரும் அவரை கொலை செய்தனரா?  என்று போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சித்ரா செல்வி சாவு குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

சிவகாசி பாரப்பட்டியை சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பாரப்பட்டியில் விட்டு விட்டு திருப்பூர் வந்து கட்டிட தொழிலாளியாக  பணியாற்றி வந்துள்ளார். திருப்பூருக்கு வந்ததும் மனைவி குழந்தைகளுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். ஊருக்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதனால் ரமேசை தேடி அவரது குடும்பத்தினர் திருப்பூர் வந்துள்ளனர். பல இடங்களில் தேடிப்பார்த்தும் ரமேசை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஊருக்கு திரும்பி விட்டனர்.

இந்தநிலையில் ரமேசுக்கும், சித்ரா செல்விக்கும் தொடர்பு இருப்பதுடன் அவர்கள் திருப்பூரில் தனியாக வசித்து வந்ததும் ரமேசின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்  நேற்று திருப்பூருக்கு வந்ததுடன், ரமேஷ் வசிக்கும் வீட்டை தேடி கண்டுபிடித்து சென்றுள்ளனர். அங்கு வீட்டில் இருந்த சித்ராசெல்வியிடம் தட்டிக் கேட்டுள்ளனர்.

ரமேசிடம் இருந்து விலகி விடுமாறு எச்சரித்துள்ளனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ரமேசின் மனைவி மற்றும் உறவினர்கள் சித்ரா செல்வியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் ரமேசின் உறவினர்கள் தாக்கியதால் அவமான மடைந்து சித்ரா செல்வி தற்கொலை செய்திருக்கலாமா? என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.

தொடர்ந்து ரமேசின் மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக தனிப்படை போலீசார் சிவகாசிக்கு விரைந்துள்ளனர். மேலும் சித்ராசெல்வியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட  உள்ளது. ரமேசின் உறவினர்களிடம் நடத்தப்படும் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை முடிவு மூலம் சித்ராசெல்வி சாவுக்கான காரணம் குறித்து உண்மை நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News