செய்திகள்
மனைவி தரணிதேவியுடன் வங்கி ஊழியர் சபரிநாதன்

மனைவியை கொன்று நாடகம்- கைதான ஈரோடு வங்கி ஊழியருக்கு பல பெண்களுடன் தொடர்பு

Published On 2021-06-14 08:49 GMT   |   Update On 2021-06-14 08:49 GMT
கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதமாக தரணிதேவி தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார்.
நாமக்கல்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 30).

இவர், கோபியில் உள்ள தேசிய வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அறிவழகன் என்பவருடைய மகள் தரணிதேவிக்கும் (25) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் கவின் பிரசன்னா என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 6 மாதமாக தரணி தேவி தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்தார். இதனால் மனைவியை சமாதானம் செய்த சபரிநாதன் நேற்று முன்தினம் குழந்தையை வீட்டில் விட்டு விட்டு மனைவியை காரில் அந்தியூர் அழைத்து சென்றார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கோட்டைமேடு மேம்பாலம் பகுதியில் சென்றபோது, காரை வழிமறித்து மர்ம நபர்கள் தங்களை தாக்கி, 7 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றதாகவும், தாக்குதலில் தரணி தேவி இறந்து விட்டதாகவும் குமாரபாளையம் போலீசில் சபரிநாதன் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தியதில், சபரிநாதன் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சபரிநாதன் பல திடுக்கிடும் தகவல்களை கக்கினார். அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நான் திருமணத்திற்கு முன்பு ராணுவத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தேன். எனக்கு ராணுவத்தில் வேலை செய்ய பிடிக்கவில்லை. இதனால் வேலையை விட்டு விட்டு, அரசு வங்கியில் தற்காலிக பணியாளராக வேலைக்கு சேர்ந்தேன்.

திருமணத்திற்கு முன்பே, எனக்கும், திருமணமான ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. இந்த சூழ்நிலையில் தான் எனக்கும், தரணிதேவிக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு கள்ளக்காதல் குறித்து எனது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்தது. இதனால் தரணிதேவி கோபித்துக் கொண்டு குழந்தையுடன் ஆத்தூரில் உள்ள அவருடைய தந்தை வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் நான் ஆத்தூருக்கு சென்று மனைவியை சமாதானப்படுத்தி புதிய வீட்டிற்கு தனிக்குடித்தனம் போகலாம் வா? என்று கூறி அழைத்து வந்தேன். புறப்படும்போது எனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு மாமனார் அறிவழகனின் காரில் பொருட்களை எடுத்துக்கொண்டு நாங்கள் இருவரும் வந்தோம்.

குமாரபாளையம் வைகுந்தம் சுங்கச்சாவடியில் வரும்போது வேறு பெண்களுடன் கள்ளக்காதல் உள்ளதா? என தரணிதேவி என்னிடம் கேட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான், பல்லக்காபாளையத்தில் வந்தபோது அவள் கன்னத்தில் அடித்தேன். இதையடுத்து அவளது கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.

பின்னர் அவள் கழுத்தில் அணிந்திருந்த நகைகளை கழற்றி, ஒரு இடத்தில் மூடி வைத்துவிட்டு, அந்தியூரில் உள்ள எனது தந்தைக்கு தகவல் தெரிவித்துவிட்டு தரணிதேவி உடலை பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு அவளது உடலை பரிசோதிக்க முடியாது என்று கூறி விட்டதால் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றேன். அங்கு பரிசோதனைக்கு பிறகு மனைவி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து கொலையில் இருந்து தப்பிக்க முடிவு செய்த நான், போலீசாரின் கவனத்தை திசை திருப்ப வேண்டி, காரில் வரும்போது வழியில் மர்மநபர்கள் தங்களை தாக்கியதாகவும், அதில் தரணிதேவி இறந்து விட்டதாகவும் கூறி நாடகமாடினேன். ஆனால் போலீசார் துருவி, துருவி விசாரித்ததில் நடந்ததை கூறி விட்டேன்.

இவ்வாறு சபரிநாதன், வாக்குமூலத்தில் கூறியிருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தரணிதேவியின் தந்தை அறிவழகன் குமாரபாளையம் போலீசாரிடம், தனது மருமகன் சபரிநாதனுக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக கூறி, அவர்களுடன் சபரிநாதன் இருக்கும் புகைப்படங்களை கொடுத்தார். கள்ளக்காதலியுடன் வாழ வேண்டி எனது மகளை கொன்று விட்டார் என கூறி கதறி அழுதார். போலீசார், ஆறுதல் கூறி அவரை அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார், சபரிநாதனை அழைத்து சென்று பதுக்கி வைத்த இடத்தில் இருந்த நகையை மீட்டனர். பின்னர் போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து, சபரிநாதனை கைது செய்து குமாரபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News