செய்திகள்
ராமதாஸ்

ஓமந்தூரார் மருத்துவமனையை சட்டமன்ற வளாகமாக மாற்றும் திட்டம் இருந்தால் கைவிட வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-06-12 07:38 GMT   |   Update On 2021-06-12 07:38 GMT
ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கின்றனர்.

சென்னை: 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு மருத்துவமனையை அங்கிருந்து இடமாற்றம் செய்து விட்டு, அந்த வளாகத்தை மீண்டும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை செயலகமாக மாற்ற முயற்சிகள் நடப்பதாக வெளியாகும் செய்திகள் மிகவும் வருத்தமளிக்கின்றன. இந்த செய்திகள் உண்மையாக இருக்கக் கூடாது என்று தமிழக மக்களைப் போல நானும் விரும்புகிறேன்.

ஓமந்தூரார் வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியில் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பு படிக்கின்றனர். இப்போது சுமார் 500 மாணவர்கள் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை படித்து வருகின்றனர். இந்த வளாகத்திலிருந்து மருத்துவமனை மாற்றப்பட்டால் மருத்துவக் கல்லூரியை மூடும் நிலை உருவாகும். தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவைப்படும் நிலையில் மருத்துவக் கல்லூரி மூடப்பட்டால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை புகழ்பெற்ற அரசு மருத்துவ நிறுவனமாக மாறியுள்ள நிலையில், அதை தில்லி எய்ம்ஸ்க்கு இணையாக தரம் உயர்த்துவதற்கு தான் அரசு முயல வேண்டும்.

எனவே, ஓமந்தூரார் வளாகத்தில் இப்போதுள்ள மருத்துவமனையை அகற்றி விட்டு, அதை சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகமாக மாற்றும் திட்டமிருந்தால் அதைக் கைவிட வேண்டும். ஓமந்தூரார் மருத்துவமனை இப்போதிருக்கும் இடத்தில் இப்போதுள்ள நிலையில் நீடிக்கும்; அங்கு தலைமைச்செயலகம் வராது என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய தலைமைச் செயலகம் சட்டப்பேரவை வளாகம் தேவை என்றால் அவற்றை அமைக்க மாற்று வழிகளை அரசு ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News