செய்திகள்
ஜி.கே.வாசன்

ஊரடங்கு முடியும் வரை மதுக்கடை திறப்பு வேண்டாம்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2021-06-12 03:16 GMT   |   Update On 2021-06-12 03:16 GMT
தமிழக அரசு ஊடரங்கு காலம் முடிந்து, கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை “டாஸ்மாக்” கடையை திறக்க கூடாது என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவின் இரண்டாவது அலையை குறைப்பதற்கு தொடர்ந்து கட்டுப்பாடுகளாலும், கோட்பாடுகளாலும், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழகத்தில் தற்போது நோய் தொற்று எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்தும், இறப்பு எண்ணிக்கை 360-க்குள்ளும் இருக்கிறது.

அதோடு இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் மாநிலத்தில் தமிழகமும் இருக்கிறது. இதனால் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் மக்கள் அச்சத்தோடும், ஒரு கட்டுப்பாட்டோடும் இருக்கும் சூழலில் கொரோனா படிப்படியாக குறைந்து அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.

இந்தநேரத்தில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து மதுக்கடைகளையும் திறக்க முடிவு எடுத்துள்ளது. இந்த செயல் குறைந்து வரும் கொரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமையும்.

மதுக்கடைகளை திறப்பதால் கொரோனா கட்டுப்பாடுகளும், கோட்பாடுகளும் மீறுதலுக்கு உள்ளாகி மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாவார்கள்.

சாதாரண, அடித்தட்டு மக்கள் பொருளாதாரம் ரீதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்நேரத்தில் அவர்கள் மேலும் துன்பத்திற்குள்ளாவார்கள்.

ஆகவே தமிழக அரசு ஊடரங்கு காலம் முடிந்து, கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை “டாஸ்மாக்” கடையை திறக்க கூடாது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News