செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

கோவை மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் 4 நாட்கள் முகாம்

Published On 2021-06-10 12:42 GMT   |   Update On 2021-06-10 12:42 GMT
வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் அங்கு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்குகிறார்.

பொள்ளாச்சி:

தி.மு.க மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அதன்பின்னர் கார்மூலம் வால்பாறைக்கு சென்ற அவர் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

தொடர்ந்து 4 நாட்கள் கோவையில் முகாமிடும் அவர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணியை பார்வையிடுகிறார். நாளை காலை வால்பாறையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உதயநிதி ஸ்டாலின் அங்கு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்குகிறார்.

தொடர்ந்து வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் அவர், அங்கு ரூ.35 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை தொடங்கி வைக்கிறார். வால்பாறையில் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு மாலையில் நெகமம் பகுதிக்கு வரும் உதயநிதி ஸ்டாலின் அங்கும் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்குவதுடன், கொரோனா சிகிச்சை மையத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். 

புறநகர் பகுதிகளில் பார்வையிட்டு முடிந்ததும் நாளை மறுநாள்(சனிக்கிழமை) கோவை மாநகர் பகுதிக்கு வரும் அவர் கோவை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குகிறார். இதுபோன்று மாவட்டம் முழுவதும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று நிவாரண பொருட்கள் வழங்குவதுடன், கொரோனா தடுப்பு பணியிலும் ஈடுபடுகிறார்.

Tags:    

Similar News