செய்திகள்
ராமதாஸ்

ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ்

Published On 2021-06-10 09:22 GMT   |   Update On 2021-06-10 09:22 GMT
தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் விதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் விமர்சனம் தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறை காரணமாக வெளியிடப்பட்ட பொறுப்பான கருத்துகளாகும். அவை வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மே 10-ந் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மே 24-ம் நாள் முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜூன் 7-ந்தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் ஊரடங்கு என்ற ஒன்று நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் இருசக்கர ஊர்திகளிலும், மகிழுந்துகளிலும் சாலைகளில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. இதே வினாவைத் தான் உயர்நீதிமன்றமும் எழுப்பியிருக்கிறது. சாலைகளில் பொது மக்கள் கட்டுப்பாடின்றி நடமாடுவதை கட்டுப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆணையிட்டிருக்கிறார்.

கொரோனா ஆபத்திலிருந்து இன்னும் தமிழ்நாடு விடுபடவில்லை; இது கொண்டாட்டத்திற்கான நேரமும் அல்ல. தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 500-க்கும் கீழாக குறைந்து விட்டாலும் கூட நாம் அபாயக் கட்டத்தை கடந்து விட்டதாக அர்த்தமல்ல. தமிழக மக்களில் 70சதவீதத்துக்கும் கூடுதலானோருக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு தான் கொரோனா ஆபத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். அதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகலாம்.

ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை சென்னையில் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் கூட, சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை இருந்ததை நாம் மறந்து விடக்கூடாது. ஊரடங்கை தமிழக அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தாததும், மக்கள் கடைபிடிக்காததும் கொரோனாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலாகும்.

எனவே, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டு மக்களும் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்; வெளியில் வந்தாலும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News