செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரிக்கு வருகிற 10ந்தேதி கிருஷ்ணா தண்ணீர் திறப்பு- ஆந்திர அதிகாரி தகவல்

Published On 2021-06-08 10:46 GMT   |   Update On 2021-06-08 10:46 GMT
புழல் ஏரிக்கு வினாடிக்கு 140 அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

அதன்படி கடந்த வருடம் செப்டம்பர் 21-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது.

மேலும் கடந்த வருடம் இறுதியில் பெய்த கன மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனை தொடர்ந்து உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது.

இப்படி திறந்துவிடப்பட்ட சுமார் 2 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் சேர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தக் கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

அதன்படி கடந்த பிப்ரவரி 6-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பலத்த மழை பெய்தபோது கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் கிராமத்தில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதமடைந்தன.

சேதமடைந்த கரைகளை சீரமைக்க தமிழக அரசு ரூ 24 கோடி ஒதுக்கியது. முதல் கட்டமாக ஜீரோ பாயிண்டிலிருந்து ஆலப்பாக்கம் வரை 6.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் சீரமைப்பு பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

அந்தேரியிலிருந்து அம்பேத்கர்நகர் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் கோடைவெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 32 31 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 20.85 அடி ஆக பதிவாகியது. வெறும் 332 மில்லியன் கன அடி தண்ணீர் திறப்பு உள்ளது.

இந்த ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு வினாடிக்கு 140 அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இப்படி பூண்டி ஏரியின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவது கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட கோரி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திரா அரசுக்கு கடிதம் எழுதினர்.

அதன்படி வருகிற 10-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தண்ணீர் 15-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் வந்தடைய வாய்ப்புள்ளது. அதன் பிறகு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு சென்றடைய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News