செய்திகள்
கே.எஸ்.அழகிரி

கொரோனா உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2021-06-01 08:00 GMT   |   Update On 2021-06-01 08:00 GMT
மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய பிரதமர் மோடி அதற்கு மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்ப முடியாது என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் மோடி அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்ததோடு, கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாப்பதில் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டார் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை.

உலக வல்லரசுகளின் ஒன்றாக இருக்கிற இந்தியாவால் அணுசக்தித்துறையின் மூலம் அற்புதங்கள் செய்து அணுகுண்டு தயாரிக்க முடிந்தது. ஆனால் மக்களின் உயிரைப் பாதுகாக்க ஒரு தடுப்பூசியைக் கூட இந்திய அரசால் உற்பத்தி செய்ய முடியவில்லை.

கடந்த காலங்களில் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தடுப்பூசி உற்பத்தி செய்து, கொள்ளை நோயிலிருந்து மக்களின் உயிரை அன்றைய மத்திய அரசுகள் பாதுகாத்தன. ஆனால், 136 கோடி மக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் பேராயுதமாக விளங்குகிற தடுப்பூசி உற்பத்தியை இரண்டு நிறுவனங்களிடம் மட்டுமே ஒப்படைத்ததால் மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

தற்போது ஏற்பட்டுள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும். மக்களின் உயிரைப் பாதுகாக்கத் தவறிய பிரதமர் மோடி அதற்கு மக்கள் வழங்கும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்ப முடியாது. எனவே, 7 ஆண்டு மோடி ஆட்சியை வேதனையிலும் வேதனையான ஆட்சியாகத் தான் நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags:    

Similar News