செய்திகள்
கே.எஸ்.அழகிரி

விவசாயிகளுக்கு பயிர் சேத இழப்பீடு வழங்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி

Published On 2021-05-29 05:37 GMT   |   Update On 2021-05-29 05:37 GMT
கன்னியாகுமரியில் வீடுகளை இழந்த மக்களுக்கும், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் விரைந்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசை கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வங்க கடலில் உருவான 'யாஸ்' புயல் ஒடிசாவில் கரையை கடந்தது. இதன்காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகப் பலத்த மழை பெய்துள்ளது. சூறைக் காற்று காரணமாக நூற்றுக்கணக்கான மரங்கள் வேருடன் பெயர்ந்தும் முறிந்தும் விழுந்தன.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நடவு செய்யப்பட்டிருந்த 10 ஏக்கர் நெல் வயல்களுக்குச் சேதம் ஏற்பட்டது. பறக்கைப் பத்து பகுதியில் நடவு செய்யப்பட்ட 60 ஏக்கர் நெல் வயலிலும் தண்ணீர் சூழ்ந்து பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. குளச்சல் பகுதியில் பெய்து வரும் மழையால், ஏ.வி.எம். கால்வாய் கரையோரம் உள்ள மீனவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் சூழ்ந்து 151 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்கிப் புயலின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் இன்னும் மீளாத நிலையில், யாஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒக்கிப் புயலில் ஏற்பட்ட பயிர்சேதத்துக்கு முந்தைய அ.தி.மு.க. அரசு இழப்பீடு தரவில்லை. எனினும், யாஸ் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் இழப்பீட்டைக் கோருவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

கடும் மழை வெள்ளப்பெருக்கு காரணமாக நெல் சாகுபடி செய்த பயிர்களெல்லாம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தொடர் மழையால் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளன. மீண்டும் நெல் சாகுபடி செய்ய விதை நெல் வழங்குவதோடு திரும்ப நெல் சாகுபடி செய்ய இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் எஸ்.ராஜேஷ்குமார் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரின்ஸ், விஜயதரணி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரியே வெள்ளக்காடாக மாறியிருக்கும் நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்கும், பயிர்களை இழந்த விவசாயிகளுக்கும் விரைந்து இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News