செய்திகள்
ஜெயபாரதி

அமெரிக்காவில் இருந்து கொண்டே கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்ய தூண்டிய என்ஜினீயர்

Published On 2021-05-25 02:44 GMT   |   Update On 2021-05-25 02:44 GMT
அமெரிக்காவில் இருந்து கொண்டே கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற என்ஜினீயர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:

திருவாரூர் கிடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவரது மகள் ஜெயபாரதி(வயது 28). பி.எஸ்சி. பட்டதாரியான இவருக்கும் தஞ்சை மாவட்டம் கரிக்குளம் பகுதியை சேர்ந்த கலைச்செல்வன் மகன் விஷ்ணுபிரகாஷ் (33) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஷ்ணுபிரகாஷ் அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு கணவன்- மனைவி இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் வைசாலி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஜெயபாரதி அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். விவாகரத்துக்கும் அவர் விண்ணப்பித்து இருந்ததாக கூறப்படுகிறது.

கணவரை விட்டு பிரிந்த ஜெயபாரதி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இங்கு வந்த பின்னர் ஆந்தைகுடி தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி ஜெயபாரதி பணியை முடித்து விட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

தப்பாளம்புலியூர் கடுமையாற்று பாலம் அருகில் எதிரில் வந்த சரக்கு வேன் மோதி பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அன்று இரவே அவர் சிகிச்சை பலனின்றி ஜெயபாரதி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஜெயபாரதியின் அண்ணன் சிவக்குமார் திருவாரூர் தாலுகா போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது தங்கை வாகன விபத்தில் இறந்ததில் சந்தேகம் இருப்பதாக கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் உள்ள ஜெயபாரதியின் கணவர் விஷ்ணுபிரகாஷின் திட்டப்படி நடந்த கொலை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இந்த கொலை வழக்கு தொடர்பாக சரக்கு வேனை ஓட்டிய தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பட்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த ரவி மகன் பிரசன்னா(24), சரக்கு வேனின் உரிமையாளர் திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(40), குடவாசல் பகுதியை சேர்ந்த ராஜா(47), குடவாசல் சித்தாநல்லூரை சேர்ந்த ஜெகன் (37) ஆகிய 4 பேரும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலையை திட்டமிட்டு நடத்துவதற்கு தூண்டிய விஷ்ணுபிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஷ்ணுபிரகாசை அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News