செய்திகள்
கமல் ஹாசன்

கமல்ஹாசன் சர்வாதிகாரியாக மாறிவிட்டார் - முன்னாள் பொதுச்செயலாளர் முருகானந்தம் பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2021-05-20 12:22 GMT   |   Update On 2021-05-20 12:22 GMT
நாங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் எனவும் தலைவர் அழைத்தாலும் மீண்டும் மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை எனவும் முன்னாள் பொதுச்செயலாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.

திருச்சி:

மக்கள் நீதி மய்யம் கட்சி சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதையடுத்து முருகானந்தம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் திடீரென ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வீரசக்தி, துணை செயலாளர்கள் அய்யனார், விஸ்வநாத் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200 பேர் மற்றும் திருச்சியின் 2,000 கிளை செயற்குழு உறுப்பினர்கள் கட்சியில் இருந்து கூண்டோடு விலகினர். அவர்கள் முன்னாள் பொதுச்செயலாளர் முருகானந்தத்துடன் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தனர்.

பின்னர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த சில மாதங்களாக கட்சியில் ஜனநாயகம் முற்றிலும் அற்றுப்போய் விட்டது. இது நமது கட்சி என்று என்னை போன்ற நிர்வாகிகள் கூறிஉழைத்து கொண்டிருந்த நிலையில் இல்லை இது என் கட்சி என்ற தோரணையில் கமலஹாசனின் செயல்பாடுகள் இருந்தன. கமல்ஹாசனின் தன்னிச்சையான முடிவுகளால் சர்வாதிகாரம் தலைதூக்கியது. ஒரு சர்வாதிகாரியாகவே அவர் மாறிவிட்டார்.

மக்கள் மத்தியில் கட்சிக்கு இருந்த நன்மதிப்பு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பலவீனமான கட்சிகளுடன் மோசமான கூட்டணி அமைத்ததால் சுக்கு நூறாகி விட்டது. பாராளுமன்ற தேர்தலில் 3.4 சதவீத வாக்குகள் வாங்கிய கட்சி சட்டமன்ற தேர்தலில் 2.4 சதவீதத்துக்கு பின்தங்கியுள்ளது.

சமத்துவமும், சகோதரத்துவமும் கொள்கைகளாக போதித்து வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு நபர் துதிபாடும் கட்சியாக தேர்தல் பிரசார மேடைகளில் இருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டோம். தலைவர் அழைத்தாலும் மீண்டும் மறு பரிசீலனை செய்ய வாய்ப்பு இல்லை.

ஆனால் என் அரசியல் பயணமும், சமூக சேவையும் நீடீக்கும். அடுத்த சட்டமன்ற தேர்தலில் திருவெறும்பூர் அல்லது சென்னை ஆலந்தூர் தொகுதியில் நிச்சயம் களம் இறங்குவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கமலஹாசனின் நேர்மை குறித்த கேள்விக்கு நேர்மையாக இருக்க விரும்புகிறேன் என பதிலளித்தார். 

Tags:    

Similar News