செய்திகள்
குற்றாலம் ஐந்தருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதை படத்தில் காணலாம்.

நெல்லை, தென்காசியில் கனமழை

Published On 2021-05-17 02:38 GMT   |   Update On 2021-05-17 02:38 GMT
நெல்லை, தென்காசியில் தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நெல்லை:

அரபிக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை நேற்றும் நீடித்தது. நெல்லையில் நேற்று அவ்வப்போது மழை பெய்தது. சிறிது நேரம் வெயிலும், சிறிது நேரம் மழையுமாக ரம்மியமாக இருந்தது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அங்குள்ள தலையணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் செல்கிறது. தற்போது தலையணை மூடப்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

இந்த திடீர் மழையால், வறண்டு கிடந்த களக்காடு உப்பாறு, பச்சையாறு, நாங்குநேரியான் கால்வாய்களில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குளங்களுக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவி அருகே உள்ள கன்னிமாறன் தோப்பு தடுப்பணையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஆற்றில் செல்கிறது. இதனால் ரோஸ்மியாபுரம் பகுதியில் உள்ள குளங்களுக்கு அதிகமாக தண்ணீர் வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் தென்காசி மற்றும் குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது.

இந்த நிலையில் நேற்று காலையிலும் சிறிது நேரம் மழை பெய்தது. ஆனால் மலைப்பகுதியில் மழை இல்லாததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் இரண்டு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

மெயின் அருவி, ஐந்தருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. தற்போது குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லாததால் அருவிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த மழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் சற்று உயர்ந்து உள்ளது. மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 102.40 அடியாக இருந்தது. நேற்று 3.20 அடி உயர்ந்து 105.60 அடியாக உயர்ந்தது. இந்த அணைக்கு வினாடிக்கு 2,629 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து குடிநீர், பாசனத்துக்கு 255 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 119.36 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 86 அடியாக உயர்ந்து உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 734 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 250 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 42.49 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 15 அடியாகவும், நம்பியாறு அணை நீர்மட்டம் 12.53 அடியாகவும் உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை நீர்மட்டம் 65.90 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வரும் 10 கன அடி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 52 அடியாக உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 48.89 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 26 கன அடி தண்ணீர் வருகிறது. குண்டாறு அணை நீர்மட்டம் 29.12 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 33 அடியாகவும் உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம் -40, சேர்வலாறு -33, மணிமுத்தாறு -9.2, நம்பியாறு -3, கொடுமுடியாறு -40, அம்பை -11, சேரன்மாதேவி -3.6, ராதாபுரம் -15, நாங்குநேரி -16.5, களக்காடு -28.4, மூலக்கரைப்பட்டி -8, பாளையங்கோட்டை -2, நெல்லை -1.

கடனா -6, ராமநதி -6, கருப்பாநதி -13, குண்டாறு -19, அடவிநயினார் -35, ஆய்க்குடி -22, செங்கோட்டை -18, தென்காசி -42.4, சங்கரன்கோவில் -11, சிவகிரி -2.
Tags:    

Similar News