செய்திகள்
கோப்புப்படம்

கடைசி நேரத்தில் பொருட்கள் வாங்க கடைகளில் அலைமோதிய கூட்டம்

Published On 2021-05-16 02:37 GMT   |   Update On 2021-05-16 02:37 GMT
ஊரடங்கு காரணமாக காலை 10 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் பொதுமக்கள் அவசர அவசரமாக கடைவீதிகளுக்கு செல்வதை தினமும் பார்க்க முடிகிறது.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு செல்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 300 பேர்களுக்கு மேல் இதில் இறந்து விடுகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந்தேதியில் இருந்து ஊரடங்கில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளன.

இதன்காரணமாக கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்குள் அடைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் தினமும் கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவசர அவசரமாக கடைகளுக்கு சென்று முண்டியடித்து பொருட்களை வாங்கிச் செல்லும் நிலை உருவாகி விட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் நேற்று காலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தான் கடை திறந்திருக்கும் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைத்தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காய்கறிகடை, மளிகை கடை, இறைச்சி கடை, பால் பூத்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சென்னையில் குறிப்பாக எம்.ஜி.ஆர்.நகர், மைலாப்பூர், வடபழனி, கோயம்பேடு, அயனாவரம், அரும்பாக்கம், வில்லிவாக்கம், வியாசர்பாடி, ஐஸ்அவுஸ், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், செனாய் நகர், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், பூந்தமல்லி, கூடுவாஞ்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, நங்கநல்லூர், பழவந்தாங்கல், ஆலந்தூர், குன்றத்தூர், மேடவாக்கம், பள்ளிக்கரணை, ராயபுரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய கடைத் தெருக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கடைக்கு வந்த கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஒவ்வொரு கடைகளிலும் கடைக்காரரின் குடும்பத்தினரும் நின்று விற்பனையில் ஈடுபட்டு மக்கள் கூட்டத்தை சமாளித்தனர். ஆனாலும் நேற்றைய தினம் நிறைய கடைகளின் முன்பு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.

போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மளிகை கடைகள் மட்டுமின்றி இறைச்சி கடைகள், பால் பூத்களிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இதனால் முக்கிய பொருட்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்டது.

இன்று முழு ஊரடங்கு என்பதால் பால் கடைகளும் அடைக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாக பொதுமக்கள் 2 நாட்களுக்கு சேர்த்து பால் வாங்கிச் சென்றனர். இதனால் பல இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஊரடங்கு காரணமாக காலை 10 மணிக்கு கடைகள் மூடப்படுவதால் பொதுமக்கள் அவசர அவசரமாக கடைவீதிகளுக்கு செல்வதை தினமும் பார்க்க முடிகிறது.

போலீசாராலும் கடை வீதிகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை. கொரோனா பீதியே இல்லாமல் பொதுமக்கள் கூட்டம் கூடுவது இன்னும் சிக்கலையே ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News