செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்து

ரெம்டெசிவிர் மருந்து பதுக்கி விற்றதாக கைதான 5 பேரின் வங்கி கணக்குகள் ஆய்வு

Published On 2021-05-15 07:52 GMT   |   Update On 2021-05-15 07:52 GMT
ரெம்டெசிவிர் மருந்தை யாரேனும் கூடுதல் விலைக்கு விற்றால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நெல்லை:

கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்கு தேவைப்படும் ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து சிலர் இந்த மருந்தை கள்ளச்சந்தையில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்று வருகிறார்கள். இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்றதாக கோவில்பட்டியை சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் சண்முகம், சகோதரர் கணேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 42 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், அவர்கள் நெல்லையை சேர்ந்த சிலரிடம் இருந்து அந்த மருந்தை வாங்கியதாக கூறினார்கள்.

இதைத்தொடர்ந்து நெல்லை சந்திப்பு போலீசார் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற நெல்லை பெருமாள் புரத்தை சேர்ந்த பிரவின் (வயது37), கே.டி.நகரை சேர்ந்த சண்முகராஜா (30), மேலப்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கிய மைக்கேல் சேவியர் (40) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் சென்னையில் இருந்து குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்தை விலைக்கு வாங்கி ரூ.20 ஆயிரத்திற்கு பலருக்கும் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனால் இவர்கள் மொத்தம் எத்தனை பேருக்கு இதுபோல கூடுதல் விலைக்கு மருந்துகள் விற்பனை செய்தார்கள் என்று நெல்லை சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை கைதான 5 பேரின் வங்கி கணக்குகளையும் போலீஸ் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். இதில் ஏராளமான பணம் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் வங்கி கணக்கும் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை யாரேனும் கூடுதல் விலைக்கு விற்றால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News