செய்திகள்
நெல்லை சந்திப்பு பகுதி சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர்

புதிய புயல் சின்னத்தால் நெல்லை, தென்காசியில் விடிய விடிய மழை

Published On 2021-05-15 04:20 GMT   |   Update On 2021-05-15 04:20 GMT
கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை:

அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இன்று வரை விடிய விடிய சாரல் மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியாறு அணைப்பகுதியில் 55 மில்லிமீட்டர் பெய்தது.

செங்கோட்டை அடவிநயினார் அணைப்பகுதியில் 43 மில்லிமீட்டரும், பாபநாசம் அணைப்பகுதியில் 44 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

நெல்லை, பாளை, அம்பை, தென்காசி, செங்கோட்டை போன்ற முக்கிய நகர் பகுதிகளிலும் விடிய விடிய சாரல் மழை பெய்தது. மழை காரணமாக மேலப்பாளையம் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது.

நெல்லை டவுன் பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்படாததால் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 2,187 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 254 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதனால் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

நேற்று 100 அடியில் இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று ஒரேநாளில் 2 அடி உயர்ந்து 102.40 அடியாக உள்ளது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 112.33 அடியாக இருந்தது. ஒரேநாளில் 4 அடி உயர்ந்து இன்று 116.40 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை வினாடிக்கு 541 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணை நீர்மட்டம் சற்று உயர்ந்து 85.50 அடியாக உள்ளது.

இதுபோல கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, கொடுமுடியாறு, அடவிநயினார் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

அடவிநயினார் அணையில் நேற்று முன்தினம் தண்ணீர் எதுவும் இல்லாமல் வறண்டு கிடந்தது. நேற்று ஒரேநாள் பெய்த மழையில் நீர்மட்டம் 25 அடியாக உயர்ந்துள்ளது. கொடுமுடியாறு அணையில் நேற்று 5 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 6.75 அடியாக உயர்ந்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

கொடுமுடியாறு 55, அடவிநயினார் 45, பாபநாசம் 44, சேர்வலாறு 23, கருப்பாநதி 20, குண்டாறு 15, நம்பியாறு 10, மணிமுத்தாறு 6.4, கடனா 5, ராமநதி 5.

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று கடலோர பகுதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

Tags:    

Similar News