செய்திகள்
கொடைக்கானல் பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசிக்க ஆள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

பூத்து குலுங்கும் ரோஜா மலர்கள்- சுற்றுலா பயணிகள் இல்லாததால் வெறிச்சோடிய பூங்காக்கள்

Published On 2021-05-14 07:54 GMT   |   Update On 2021-05-14 07:54 GMT
கொடைக்கானல் பூங்காவில் பூத்து குலுங்கும் ரோஜா மலர்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இல்லாததால் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் சீசன் சமயத்தில் வெறிச்சோடி காணப்படுகிறது.
கொடைக்கானல்:

இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக ரோஜா பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் 16,000 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல், மே, மாதங்களில் கொடைக்கானலில் சீசன் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சீசனுக்காக சுற்றுலா பயணிகளின் கண்களை கவரும் விதமாக ரோஜா பூங்காவில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சன் கோல்டு, சம்மர் டிரீம், பிரின்சஸ், பெர்ப்யூம், டிலைட், ஈபிள் டவர், கிலோட் கிஸ் அப் பையர் உள்ளிட்ட 1500 ரோஜா வகைகள் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வண்ண வண்ண நிறங்களில் பூத்து குலுங்குகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகையின்றி ரோஜா பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் அழுகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ரோஜா பூங்கா மட்டுமின்றி பிரையண்ட் பார்க், ஏரிச்சாலை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக இதே காலகட்டத்தில் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும்.

இதனை காண இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். ஆனால் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சீசன் களை இழந்து காணப்படுகிறது. 
Tags:    

Similar News