செய்திகள்
கேஎஸ் அழகிரி

தடுப்பூசி, ஆக்சிஜன் விநியோகிக்க பொதுவான அமைப்பு தேவை- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

Published On 2021-05-14 05:13 GMT   |   Update On 2021-05-14 05:13 GMT
தடுப்பூசிகள், ஆக்சிஜன், கொரோனா பரிசோதனைக் கருவிகள், ஆகியவற்றைப் பாரபட்சம் இன்றி எல்லா மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய மத்திய அரசு, அலட்சியப் போக்குடன் நடந்து கொள்வதாக கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனாவின் முதல் அலையை எதிர்கொண்டோம். அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், இரண்டாவது அலையின் போது, குடும்பத்தைக் காப்பாற்றக்கூடிய இளைஞர்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்து வருகிறார்கள்.

நகர்ப்புறங்களில் பரவிய கொரோனா தொற்றின் தாக்கம் கிராமப்புறங்களிலும் அதிகரித்துள்ளது. எது வேண்டுமானாலும் எப்போதும் நடக்கலாம் என்ற நிச்சயமற்ற தன்மை மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

கடந்த மே 11-ந்தேதி வரை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு 18 கோடி தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு டோஸ் போட்டவர்கள் மொத்த மக்கள் தொகையில் 19 சதவிகிதம். இதில் 2 டோஸ்கள் போட்டவர்கள் 4 சதவிகிதம் மட்டுமே. இந்நிலையில், மீதியிருக்கிற 80 சதவிகித மக்களுக்கு மத்திய அரசு தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநிலங்கள் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தடுப்பூசிகள், ஆக்சிஜன், கொரோனா பரிசோதனைக் கருவிகள், ஆகியவற்றைப் பாரபட்சம் இன்றி எல்லா மாநிலங்களுக்கும் வழங்க வேண்டிய மத்திய அரசு, அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டிருக்கிறது.

இரண்டே மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே ஏகபோக உற்பத்தியாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வைத்தது தான் சட்டமாக இருக்கிறது.

இந்தியா முழுவதுக்கும் பொதுவான அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் கொள்முதல் செய்து, பாதிப்புக்கு ஏற்றாற்போல் தடுப்பூசி மருந்துகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் ஆகியவற்றைச் சமநிலைத் தன்மையோடு வினியோகிக்க வேண்டும்.

மாநிலங்கள் நேரடியாகத் தடுப்பூசிகளை வாங்கச் சொல்லிய மத்திய அரசு, அதற்கான செயல்முறையை வகுக்கவில்லை. நாடு முழுவதும் தடுப்பூசி கொள்கை தவறாக வழிநடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News