செய்திகள்
கொரோனா வைரஸ்

இணை நோய் இல்லாத இளைஞர்களை அதிகம் தாக்கும் கொரோனா தொற்று

Published On 2021-05-13 09:19 GMT   |   Update On 2021-05-13 09:19 GMT
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டு இருக்கிறது. தினமும் 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி:

கொரோனா வைரசின் 2-வது அலை இந்தியாவை புரட்டி போட்டுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய மருத்துவ வசதியின்மை போன்ற காரணங்களால் வடமாநிலங்களில் கொத்து கொத்தாக மக்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சம் தொட்டு இருக்கிறது. தினமும் 30 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நேற்றைய பரிசோதனை முடிவில் 879 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 850-ஐ கடந்து செல்கிறது. இறப்பு சதவீதமும் அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் திருச்சியில் 12 பேர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் கணிசமானோர் இளம் வயதினர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 50 வயதை கடந்தவர்களாக இருந்தனர். இளம் வயதினரை அதிகம் தாக்கவில்லை.

ஆனால் தற்போது திருச்சியில் வரும் தினசரி தொற்றாளர்களில் 32 முதல் 40 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினராக இருப்பதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். தற்போது எந்த இணை நோயும் கண்டறியப்படாத பல இளைஞர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதே போன்று 40 வயதுக்கு உட்பட்ட பலர் அதிக எண்ணிக்கையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாகவும் மருத்துவத்துறையினர் கவலை தெரிவித்தனர்.

ஆகவே தற்போதைய கொரோனா வைரசின் வீரியம் மற்றும் பரவும் திறன் அதிகமாக இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரசை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பலர் ஹாயாக வெளியே சுற்றி திரிகிறார்கள். நோய் தாக்கத்தின் தன்மை அறிந்து தேவையில்லாமல் வெளியே சுற்றாமல் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், உறவுகளையும், நண்பர்களையும் பாதுகாக்குமாறு இளைஞர்களுக்கு மருத்துவத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags:    

Similar News