செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கொரோனா 3வது அலை தாக்கும் முன் தயாராகுங்கள்: ஆக்சிஜன், தடுப்பூசிக்கு உடனடி நடவடிக்கை தேவை - சென்னை ஐகோர்ட்

Published On 2021-05-10 13:20 GMT   |   Update On 2021-05-10 14:46 GMT
தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
சென்னை:

நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தான் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழுவும் நியமிக்கப்பட்டது. பிறகு, மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

தற்போது ஆக்சிஜன் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஸ்டெர்லைட்டில் இருந்து ஆக்சிஜன் கிடைக்க காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மே 15 ஆம் தேதி முதல் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும். எதிர்வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு குறையாவிடில் 700 முதல் 800 டன் ஆக்சிஜன் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டது. 

தமிழகத்திற்கு 475 ஆக்சிஜன் தேவை என்ற நிலையில் 419 டன் ஆக்சிஜன் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் பாதிப்பு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பதால் ஆக்சிஜன் உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மூன்றாவது அலை தாக்கும் அபாயம் உள்ளதால் தயார் நிலையில் இருக்க வேண்டும். மோசமான நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.

மேலும், தமிழகம், புதுச்சேரிக்கு ஆக்சிஜன், தடுப்பூசி மற்றும் மருந்து சப்ளைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை மே 12ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Tags:    

Similar News