செய்திகள்
எலி

மதுரை அரசு மருத்துவமனையில் எலிகள் அட்டகாசம்- நோயாளிகள் அதிர்ச்சி

Published On 2021-05-10 10:32 GMT   |   Update On 2021-05-10 10:32 GMT
மதுரை அரசு மருத்துவமனை 105-வது பொது வார்டில் எலிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
மதுரை:

தென்மாவட்டங்களில் பெரிய மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விளங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் திருவிழா போல் மருத்துவமனை நிரம்பி வழிந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனை 105-வது பொது வார்டில் எலிகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிகிச்சை பெறுபவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

எலிகளை விரட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. நோயாளிகளின் படுக்கை மேல் ஏறி குதித்து விளையாடி வருகிறது.

தாய்மார்களுடன் பச்சிளம் குழந்தைகளும் இதே வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே விபரீதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் எலிகள் தொல்லை ஒரு பக்கம் என்றால், இன்னொரு புறம் கொரோனா தொல்லை.

இங்கு இடநெருக்கடி காரணமாக படுக்கைகள் அருகருகே அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அந்த வார்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதே நேரத்தில் தொற்று உறுதியான நோயாளி 4 மணி நேரத்திற்கும் மேலாக அதே வார்டில் இருந்து உள்ளார். அதன் பின்பு தான் அந்த நோயாளி கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அனைத்து நோயாளிக்கும் தொற்று பரவி விடுமே என்பதை பற்றி கவலைப்படாமல் மருத்துவமனை நிர்வாகம் தினசரி பணிகளை மட்டுமே மேற்கொண்டு வந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி கூறுகையில், நோயாளிகள் தினமும் ஆஸ்பத்திரிக்குள் தின்பண்டம் உணவுகளைக் கொண்டு வருகிறார்கள், இதனால் எலி வருகிறது. அவற்றை வார்டுக்குள் வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சி எடுத்தும் வந்து விடுகிறது. இது சம்பந்தமாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்து உள்ளார்

Tags:    

Similar News