செய்திகள்
முத்துமாரி

மொபட் மீது லாரி மோதல்: இஸ்ரோ பெண் ஊழியர் பலி

Published On 2021-05-06 12:46 GMT   |   Update On 2021-05-06 12:46 GMT
ஆரல்வாய்மொழியில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில், இஸ்ரோ பெண் ஊழியர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இன்னொரு பெண் லேசான காயத்துடன் தப்பினார்.
ஆரல்வாய்மொழி:

நெல்லை மாவட்டம் சேர்ந்தமங்கலம் அருகே நொச்சி குளத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி முத்துமாரி (வயது 27). இவர் ஆரல்வாய்மொழி அருகே உள்ள இஸ்ரோவில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.

சம்பத் தற்போது நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் அருந்ததியர் தெருவில் வசித்து வருகிறார். அங்கிருந்து முத்துமாரி தினமும் மொபட்டில் வேலைக்கு சென்று வந்தார். அதன்படி நாகர்கோவிலில் இருந்து மொபட்டில் நேற்று முத்துமாரி புறப்பட்டு வெள்ள மடம் வந்தார்.

அங்கு அவருடன், இஸ்ரோவில் பணிபுரியும் தாழக்குடி கீழத் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி (36) மொபட்டின் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார். இருவரும் ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் பகுதியில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் வந்த இருவரும் கீழே தூக்கி வீசப்பட்டனர். அப்போது முத்துமாரி தலையில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் முத்துமாரி சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜேஸ்வரி லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முத்துமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான சிதறாலை சேர்ந்த ஜெபராஜ் (வயது 35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News