செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 98 அடியை நெருங்கியது

Published On 2021-04-30 04:37 GMT   |   Update On 2021-04-30 04:37 GMT
மேட்டூர் அணையில் பருவமழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும்.

மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 2,469 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2,597 கன அடியாக அதிகரித்தது. இன்று 2 ஆயிரத்து 30 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 97.77 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 97.87 அடியானது. இன்று நீர்மட்டம் மேலும் உயர்ந்து 97.93 அடியாக உயர்ந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணையில் பருவமழைக் காலங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படும். ஆண்டு தோறும் கோடை காலத்தில் மதகுகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படும்.

அணையில் தற்போது, 16 கண் மதகு பகுதியில் அணை பணியாளர்களைக் கொண்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதகு ரோலர்கள், சங்கிலிகளில் கிரீஸ் வைப்பது, மதகுகளில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இரும்புத்துரு ஆகியவற்றை அகற்றி, வண்ணம் பூசுதல் உள்ளிட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் வெள்ளநீரை வெளியேற்ற உதவும் 16 கண் மதகுகளில் பராமரிப்புப் பணிகள் ஒரு வாரத்துக்குள் நிறைவடையும், தொடர்ந்து 8 உயர்மட்ட மதகுகள் 5 கீழ் மட்ட மதகுகள் பராமரிப்புப் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News