செய்திகள்
தாக்குதல்

கடைக்காரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்த அதிகாரி- நியாயம் கேட்ட வியாபாரி மீது சரமாரி தாக்குதல்

Published On 2021-04-24 08:06 GMT   |   Update On 2021-04-24 08:06 GMT
சென்னையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைக்காரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

சென்னை:

சென்னையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கடைக்காரர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

அம்பத்தூர் அருகே உள்ள அத்திப்பட்டு ஐ.சி.எப். காலனியில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் முக கவசம் அணியவில்லை என்று கூறி கடை உரிமையாளர் லட்சுமணனுக்கு மாநகராட்சி அதிகாரி ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

ஆனால் கடைக்காரர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கடைக்கு வந்த வாடிக்கையாளர் முக கவசம் அணியாவிட்டால் அவருக்கு தான் ரூ. 200 அபராதம் விதிக்க வேண்டும். கடை உரிமையாளருக்கு அபராதம் விதிப்பது நியாயமா? என்று கேட்டார்.

முக கவசம் அணியாததற்கு அபராதம் விதிக்கும் நீங்களே முக கவசம் அணியாமல் வருகிறீர்களே என்று நியாயம் கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த மாநகராட்சி அதிகாரி துணிக்கடை உரிமையாளர் லட்சுமணனை சரமாரியாக தாக்கினார். இதில் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

காயம் அடைந்த லட்சுமணனை பக்கத்து கடைக்காரர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து அம்பத்தூர் எஸ்டேட் போலீசில் வியாபாரி லட்சுமணன் புகார் செய்தார். ஆனால் போலீசார் இதுவரை மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசி காலதாமதப்படுத்துவதாக வியாபாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News