செய்திகள்
கொடைக்கானல் பைன்மரக்காடுகள் சுற்றுலா பயணிகள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அரசு கட்டுப்பாடுகள் எதிரொலி- கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிச்சோடியது

Published On 2021-04-20 08:31 GMT   |   Update On 2021-04-20 08:31 GMT
பிரையண்ட் பார்க், செட்டியார்பார்க், படகு குழாம் ஆகியவையும் சுற்றுலா பயணிகளுக்கு பார்வையிட தடைவிதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்படும் என்றும் இங்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் பார்வையிட தடைவிதிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இவை அனைத்தும் நேற்று மாலையே மூடப்பட்டுவிட்டன. இதேபோல பிரையண்ட் பார்க், செட்டியார்பார்க், படகு குழாம் ஆகியவையும் சுற்றுலா பயணிகளுக்கு பார்வையிட தடைவிதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. குறிப்பாக தேர்தல் பணியாற்றி ஓய்வுக்காக அரசியல் கட்சியினர் அதிகளவில் வந்து தங்கியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் நேற்று மாலையே சொந்த ஊருக்கு திரும்பினர்.

இதனால் கொடைக்கானல்- வத்தலக்குண்டு சாலையில் வாகனங்கள் நீண்டவரிசையில் ஊர்ந்து சென்றன. இன்று விடுதிகளில் தங்கியிருந்த மற்ற சுற்றுலா பயணிகளும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், விடுதி உரிமையாளர்கள், ஓட்டல் தொழிலாளர்கள், டாக்சி ஓட்டுனர்கள், வழிகாட்டிகள் போன்ற பல்வேறு தரப்பினரும் சுற்றுலா தலங்கள் அடைக்கப்பட்டதால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் தமிழக அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News