செய்திகள்
பண்ணையில் முயல் வளர்ப்பு குறித்து தொழிலாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்த காட்சி.

கொடைக்கானல் கூக்கால் ஏரி பகுதியில் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் நடைபயிற்சி

Published On 2021-04-20 03:08 GMT   |   Update On 2021-04-20 03:08 GMT
மன்னவனூரில் உள்ள மத்திய உரோம ஆராய்ச்சி நிலைய பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு வளர்க்கப்பட்டு வரும் கம்பளி ஆடுகள் மற்றும் முயல்களை பார்வையிட்டார்.
கொடைக்கானல்:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி, மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் ஓய்வெடுப்பதற்காக கடந்த 16-ந்தேதி கொடைக்கானலுக்கு வந்தார். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவர்கள் தங்கியுள்ளனர்.

மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சுற்றுப்பயணம் செய்து கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களை பார்வையிட்டு வருகிறார். மேலும் ஏரிச்சாலையில் அவர் நடைபயிற்சியும் மேற்கொண்டார். இதேபோல் அவரது குடும்பத்தினரும் சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர்.

இந்தநிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை மேல் மலைப்பகுதியான கூக்கால் கிராமத்தில் உள்ள அழகிய ஏரிப்பகுதியில் தனது குடும்பத்தினருடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது இயற்கை காட்சிகளை அவர் கண்டு ரசித்தார்.

அதைத்தொடர்ந்து மன்னவனூரில் உள்ள மத்திய உரோம ஆராய்ச்சி நிலைய பண்ணைக்கு அவர் சென்றார். அங்கு வளர்க்கப்பட்டு வரும் கம்பளி ஆடுகள் மற்றும் முயல்களை பார்வையிட்டார். அப்போது அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடம் கம்பளி ஆடு மற்றும் முயல் வளர்ப்பு குறித்து மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

முன்னதாக மு.க.ஸ்டாலின் வருகை குறித்து அறிந்த கூக்கால் ஏரி மற்றும் மன்னவனூர் பகுதி பொதுமக்கள், அவருடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் மாலையில் அவர், குடும்பத்தினருடன் ஓட்டலுக்கு திரும்பினார்.
Tags:    

Similar News